இவருக்கு வயசு ஆகல! ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய தல தோனி – ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை

Dhoni
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு கடந்த வருடம் ஆரஞ்சு தொப்பி வென்று அசத்திய ருதுராஜ் கைக்வாட் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவருடன் மற்றொரு தொடக்க வீரரான டேவோன் கான்வே 3 ரன்களில் அவுட்டாக 28/2 என சென்னை ஆரம்பத்திலேயே தடுமாறியது.

kkrvscsk

- Advertisement -

போராடிய தல தோனி:
அதை தொடர்ந்து களமிறங்கிய ராபின் உத்தப்பா 21 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட நல்ல தொடக்கம் பெற்றபோதிலும் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே அம்பத்தி ராயுடு 15 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சிவம் துபே 3 ரன்களில் நடையை காட்டினார். இதனால் 10.5 ஓவர்களில் 61/5 என அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்ட சென்னையின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியானது.

இதனால் 100 ரன்களைக் கூட தொடுமா என்ற பரிதாபத்திற்கு தள்ளப்பட்ட சென்னை அணிக்கு களமிறங்கிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாட முயன்ற போதும் பெரிய ஷாட்கள் அடிக்கமுடியாமல் தவித்தார். ஆனால் அவருடன் களமிறங்கிய சென்னையின் முக்கிய முதுகெலும்பு மற்றும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஆரம்பத்தில் ரன்கள் எடுக்க தடுமாறினார். இதனால் மீண்டும் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுகிறார் என அவரை நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர்.

Dhoni

ஆனால் ஒரு கட்டத்திற்குப் பின் பழைய பன்னீர்செல்வமாக மாறிய அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எப்படி எதிரணிகளை தெறிக்க விட்டாரோ அதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக 17 ஓவர்களில் 82/5 என தடுமாறிக் கொண்டிருந்த சென்னையை தனது அதிரடியான பேட்டிங்கால் காப்பாற்றிய அவர் 38 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட அரைசதம் அடித்து 50* எடுத்தார். இதனால் ஓரளவு தப்பித்த சென்னை 20 ஓவர்களில் 131/5 ரன்கள் எடுத்தது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

கொல்கத்தா வெற்றி:
இதை தொடர்ந்து 132 என்ற சுலபமான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 16 ரன்கள் எடுக்க அவருடன் ஜோடியாக விளையாடிய அனுபவம் வீரர் அஜிங்க்ய ரகானே 34 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 44 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். அடுத்து களமிறங்கிய நித்தீஷ் ராணா 21 ரன்கள், சாம் பில்லிங்ஸ் 25 எடுக்க கடைசி நேரத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 20* ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்தார்.

இதனால் 18.3 ஓவர்களில் 133/4 ரன்கள் எடுத்த கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றியை ருசித்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. மறுபுறம் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையில் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்திய நடப்பு சாம்பியன் சென்னை அணியினர் இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே பரிதாப தோல்வி அடைந்து தோல்வியுடன் இந்த தொடரை துவக்கியுள்ளது.

- Advertisement -

இவருக்கு வயசு ஆகல:
நேற்றைய போட்டியில் சென்னை ரசிகர்களுக்கு எம்எஸ் தோனியின் பேட்டிங் மட்டுமே மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது என்றே கூற வேண்டும். ஏனெனில் ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் இதுபோல எத்தனையோ போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர் அதிரடியாக ரன்களைக் குவித்து சென்னை அணிக்கு பல வெற்றிகளை தேடி கொடுத்ததால் அவரை பினிசெர் என அனைவரும் அழைத்து வந்தனர். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 300, 400 ரன்களை அடித்து வந்த அவர் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் முறையாக ரன்களை அடிக்க முடியாமல் மோசமான பார்மில் தவித்து வெறும் 200 ரன்களை மட்டுமே எடுத்தார்.

Dhoni 1

அதன் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் பெரிய அவமானத்தைச் சந்தித்தது. அதன்பின் 2021-ஆம் ஆண்டு அதைவிட மோசமாக தடுமாறிய அவர் வெறும் 114 ரன்களை மட்டுமே எடுத்த போதிலும் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாகவும் இதர வீரர்களின் உதவியுடனும் சென்னை அணிக்கு 4-வது கோப்பையை பெற்றுக் கொடுத்தார். மொத்தத்தில் கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் படுமோசமான பார்மில் திண்டாடிய அவர் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த 2 ஐபிஎல் சீசன்களில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் பரிதாப நிலையில் தவித்து வந்தார். அதனால் அவரை “முடிந்து போன பினிசெர்” என அவருக்கு பிடிக்காத ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடந்த 2 வருடங்களாக கேலி பேசி வந்தனர்.

தற்போது 40 வயதை கடந்துவிட்டதால் “இனிமேல் அவ்ளோதான்” என முத்திரை குத்தப்பட்ட அவர் நேற்றைய போட்டியில் சென்னை தடுமாறியபோது மீண்டும் பழைய தோனியாக விஸ்வரூபம் எடுத்து காற்றில் பறக்க இருந்த சென்னையின் மானத்தை ஓரளவு காப்பாற்றினார். குறிப்பாக நேற்றைய போட்டியில் அவரின் ஆட்டத்தை பார்த்த பல ரசிகர்கள் மிகுந்த உணர்ச்சிக்கு உள்ளாகி “இவருக்கு வயசு ஆகவே இல்லை” என கூறினார்கள்.

நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக வயதில் அரைசதம் அடித்த இந்திய வீரர் மற்றும் இந்திய விக்கெட் கீப்பர் ஆகிய 2 புதிய சாதனைகளை படைத்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியல் இதோ:
1. ஆடம் கில்கிறிஸ்ட் : 41 வருடம் – 181 நாட்கள்
2. கிறிஸ் கெயில் : 41 நாட்கள் – 39 நாட்கள்
3. எம்எஸ் தோனி : 40 வருடம் – 262 நாட்கள்*

Advertisement