வீடியோ : மார்க் வுட்’டை அடுத்தடுத்த சிக்ஸர்களால் தெறிக்க விட்ட தல தோனி – ஐபிஎல் வரலாற்றில் 2 மாஸ் வரலாற்று சாதனை

MS Dhoni SIX
- Advertisement -

கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 3ஆம் தேதியன்று இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 6வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் இப்போட்டியில் வெற்றியை காண வேண்டிய நிர்பந்தத்துடன் களமிறங்கிய சென்னைக்கு புதுப்பொலிவுடன் கட்டமைக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் 2019க்குப்பின் ஏராளமான ரசிகர்கள் மஞ்சள் உடையுடன் வந்து ஆதரவு கொடுத்தனர்.

அந்த நிலைமையில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக ரன்களை சேர்த்தனர். குறிப்பாக மார்க் வுட் போன்ற பவுலர்களை வெளுத்து வாங்கிய ருதுராஜ் முதல் ஆளாக அரை சதமடித்து 6 ஓவரிலேயே 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னைக்கு மிரட்டலான தொடக்கம் கொடுத்தார். அவருக்கு நிகராக டேவோன் கான்வே அதிரடி காட்டியதால் 9.1 ஓவரில் 110 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிராக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடியாக சாதனை படைத்து பிரிந்தது.

- Advertisement -

தல தோனி மாஸ் சாதனை:
அதில் ருதுராஜ் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 57 (31) ரன்கள் விளாசி அவுட்டாக அடுத்த சில ஓவர்களிலேயே அரை சதமடிக்க முயற்சித்த டேவோன் கான்வே 5 பவுண்டரி 2 சிக்சருடன் 47 (29) ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். அந்த நிலைமையில் களமிறங்கிய சிவம் துபே ஆரம்பத்தில் தடுமாறினாலும் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 27 (16) ரன்களும் மொயின் அலி 3 பவுண்டரியுடன் 19 (13) ரன்களும் எடுத்து அவுட்டாக அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 8 (8) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் அம்பத்தி ராயுடு 2 பவுண்டரி 2 சிக்சருடன் 27* (14) ரன்கள் விளாசி 200 ரன்களை தாண்ட உதவினார். ஆனால் எதிர்புறம் ரவீந்திர ஜடேஜா தடுமாறி 3 (6) ரன்னில் அவுட்டான போது கொஞ்சம் கூட சோகத்தை வெளிப்படுத்தாத சென்னை ரசிகர்கள் அடுத்து வந்த கேப்டன் தோனிக்கு விண்ணதிர முழங்கி ஆரவாரம் செய்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அந்த மிகப்பெரிய ஆசியுடன் களமிறங்கிய தோனி கடைசி ஓவரை வீசிக்கொண்டிருந்த மார்க் வுட்’டை எதிர்கொண்ட முதல் பந்திலேயே தேர்ட் மேன் திசையில் பிளாட்டான சிக்ஸரை பறக்க விட்டார்.

- Advertisement -

அதை விட சற்று பவுன்ஸ் ஆகி வந்த அடுத்த பந்தை மிட் விக்கெட் திசையில் மெகா சிக்ஸராக தோனி பறக்க விட்ட போது மெரினா கடற்கரைக்கு கேட்கும் அளவுக்கு சேப்பாக்கத்தில் இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆரவாரம் செய்தனர். அந்த நிலையில் அடுத்த பந்தில் மீண்டும் சிக்ஸர் அடிக்க முயற்சித்த தோனி கேட்ச் கொடுத்து 3 பந்தில் 12 ரன்களை விளாசி தன்னுடைய வேலையை கச்சிதமாக செய்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் 20 ஓவர்களில் சென்னை 217/7 ரன்கள் குவித்து அசத்த லக்னோ சார்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

அப்படி 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி இந்த சீசனில் அதிக விக்கெட்களை எடுத்த பவுலராக ஊதா தொப்பியுடன் அசத்தி வரும் மார்க் வுட்டை அடுத்தடுத்த சிக்ஸர்களாக பறக்க விட்ட தோனி ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களை குவித்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையும் படைத்தார். மேலும் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் தோனி படைத்தார்.

இதையும் படிங்க: வீடியோ : பிரித்து மேய்ந்த ருதுராஜ் – கான்வே ஜோடி லக்னோவுக்கு எதிராக அதிரடி சாதனை, சென்னையின் பெரிய ஸ்கோர் இதோ

அத்துடன் விராட் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு பின் 5000 ஐபிஎல் ரன்களை கடந்த 7வது வீரர் என்ற சாதனையும் தோனி படைத்தார். அது போக ஐபிஎல் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 5000 ரன்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அந்த பட்டியல்:
1. சுரேஷ் ரெய்னா : 3619
2. எம்எஸ் தோனி : 3692*
3. ரோகித் சர்மா : 3817
4. விராட் கோலி : 3827

Advertisement