வீடியோ : 41 வயதிலும் அனலாக பறந்த 200வது சாதனை சிக்ஸர், சூப்பர் பினிஷிங் கொடுத்த தல தோனி – ரசிகர்கள் முக்கிய கோரிக்கை

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கியது. நட்சத்திர கலை விழா நிகழ்ச்சிகளுடன் இரவு 7.30 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கி சென்னைக்கு டேவோன் கான்வே 1 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் 2வது விக்கெட்டுக்கு ருதுராஜ் கைக்கவாட் உடன் இணைந்து 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மொயின் அலி 4 பவுண்டரி 1 சிக்சருடன் 23 (17) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலையில் வந்த பென் ஸ்டோக்ஸ் 7 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு 4வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தடுமாறி 12 (12) ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய ருதுராஜ் கைக்வாட் வழக்கத்துக்கு மாறாக அதிக சிக்ஸர்கள் அதாவது 4 பவுண்டரிகளையும் 9 மெகா சிக்சர்களையும் பறக்க விட்டு சதத்தை நெருங்கிய போதிலும் துரதிஷ்டவசமாக 92 (50) ரன்களில் ஆட்டமிழந்து சென்றார்.

- Advertisement -

200வது சிக்ஸர்:
அந்த நிலைமையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா 1 (2) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தியதால் அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில் சிவம் துபே 19 (18) ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். அதனால் கடைசி நேரத்தில் தடுமாறிய சென்னைக்கு அடுத்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் எம்எஸ் தோனி ஜோஸ் லிட்டில் வீசிய 20வது ஓவரில் சிக்ஸரையும் பவுண்டரியும் பறக்க விட்டு 14* (7) ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்தார். அதனால் ஓரளவு தப்பிய சென்னை 20 ஓவர்களில் 178/6 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத் சார்பில் அதிகபட்சமாக ஷமி, அல்சாரி ஜோசப், ரசித் கான் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இந்த போட்டியில் அடித்த சிக்ஸரையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்காக 200 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் எம்எஸ் தோனி படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 180 சிக்ஸர்கள் அடித்து 2வது இடத்தில் இருக்கிறார். அத்துடன் கிறிஸ் கெயில் (பெங்களூரு), ஏபி டீ வில்லியர்ஸ் (பெங்களூரு), பொல்லார்ட் (மும்பை), விராட் கோலி (பெங்களூரு) ஆகியோருக்கு பின் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக 200 சிக்சர்கள் அடித்த 5வது வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் வரலாற்றில் 20வது ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் தோனி தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 53*
2. கைரன் பொல்லார்ட் : 33
3. ரவீந்திர ஜடேஜா : 26
4. ஹர்டிக் பாண்டியா : 25
5. ரோஹித் சர்மா : 23

முன்னதாக 41 வயதை கடந்து விட்ட தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீப காலங்களாகவே பேட்டிங்கில் தடுமாறுவதால் ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களுக்கு பின் கீழ் வரிசையில் களமிறங்குகிறார். இருப்பினும் வயசானாலும் ஸ்டைல் மாறாது என்பது போல் முடிந்தளவுக்கு சிறப்பாக பேட்டிங் செய்து 41 வயதிலும் நல்ல பினிஷிங் கொடுத்த அவர் அடுத்து வரும் போட்டிகளில் சற்று மேலே பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: வீடியோ : 41 வயதிலும் அனலாக பறந்த 200வது சாதனை சிக்ஸர், சூப்பர் பினிஷிங் கொடுத்த தல தோனி – ரசிகர்கள் முக்கிய கோரிக்கை

ஏனெனில் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் முன்கூட்டியே களமிறங்கினால் இன்னும் நன்கு செட்டிலாகி பெரிய ரன்களை குவிப்பதற்கான தேவையான நேரம் கிடைக்கும். அதை பார்த்து ரசிகர்களும் மகிழ்ச்சியடைவார்கள். அத்துடன் தற்போதுள்ள ஃபார்முக்கு ரவீந்திர ஜடேஜா அவருக்கு பதில் பினிஷராக செயல்படுவார்.

Advertisement