கோடைகாலத்தில் இந்தியாவின் மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 10ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 55வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. அதில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறும் டெல்லி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. மறுபுறம் 13 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்தாலும் 50% மட்டுமே உறுதியாகியுள்ள பிளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெறுவதற்கு இந்த போட்டியிலும் சென்னை வெற்றி பெறுவது அவசியமாகிறது.
இருப்பினும் பொதுவாகவே தன்னுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் சிறப்பாகவே செயல்பட்டு வரும் சென்னை கடந்த போட்டியில் பரம எதிரியான மும்பையை 12 வருடங்கள் கழித்து தோற்கடித்தது. அந்த வகையில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் இந்த போட்டிக்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் சேப்பாக்கத்தில் கடந்த சில தினங்களாகவே தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
உழைப்புக்கு கெளரவம்:
அதிலும் தோனி தலைமையில் வலைப் பயிற்சியில் ஈடுபட்ட சென்னை அணியினருடன் அவர்களுடைய குழந்தைகளும் பயிற்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக தனது மகள் ஜிவா கால்பந்து விளையாடுவதை உன்னிப்பாக கவனித்த தோனி அதற்கு தேவையான பயிற்சிகளை கொடுக்க ராபின் உத்தப்பா, மொய்ன் அலி ஆகியோரும் குழந்தைகளுக்கு தேவையான பயிற்சிகளை கொடுத்தனர். அதை விட அந்த பயிற்சியின் முடிவில் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வென்ற “எலிஃபண்ட் விஸ்பர்ஸ்” பட குழுவினரை நேரில் அழைத்துச் சென்னை அணி நிர்வாகம் பாராட்டி கௌரவித்தது.
தமிழ்நாட்டின் பிரபல முதுமலை புலிகள் காப்பகத்தில் புதிதாகப் பிறந்த யானை குட்டிகளை பராமரித்து வளர்க்கும் பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோரின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையிலான ஆவண படத்தை கார்த்திகி கோன்சேல்வ்ஸ் அவர்கள் படமாக்கி கடந்த வருடம் டிசம்பரில் நெட்பிளிக்ஸ் இணையத்தில் வெளியிட்டார். அந்த ஆவணப் படத்தில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான அன்புடன் யானை குட்டிகளின் மீது மிகுந்த பாசத்தைக் காட்டி வளர்வதற்கு உதவிய அந்த தம்பதியினரின் வாழ்க்கை அனைவரது நெஞ்சங்களை தொட்டது.
குறிப்பாக பல ஜாம்பவான் நடிகர் நடிகைகளை மிஞ்சும் வகையில் அந்த ஆவணப்படத்தில் அவர்கள் நடிக்கவில்லை மாறாக மனிதர்களாக வாழ்ந்து தங்களது உண்மையான வாழ்க்கையை அப்படியே வெளிப்படுத்தினர். அப்படி நடிப்பை மிஞ்சிய உண்மையான உணர்வுகளுக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக எத்தனையோ இந்திய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களால் எட்ட முடியாத ஆஸ்கர் விருதை கடந்த மாதம் வென்ற பொம்மன் மற்றும் பெல்லி உள்ளிட்ட படக்குழுவினர் தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்தனர்.
அப்போதிலிருந்தே தமிழக முதல்வர் உட்பட பலரது பாராட்டுகளையும் கௌரவத்தையும் பெற்று வரும் அவர்களுக்கு தமிழகத்தின் ஐபிஎல் அணியான சென்னை நிர்வாகம் சார்பில் டெல்லிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக சிறிய பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் அந்த எதிர்பார்ப்பில்லாத யானைகளின் மீது உண்மையான அன்பு கொண்ட தம்பதியினரை சென்னை அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதனுடன் இணைந்து இருகரம் கூப்பி வரவேற்ற தோனி கை கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தார்.
அத்துடன் தன்னுடைய மகளையும் அவர்களிடம் அறிமுகப்படுத்தி கை கொடுத்து வைத்த தோனி புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் அவர்களை பாராட்டும் வகையில் மூவருக்கும் தன்னுடைய கையொப்பமிட்ட ஜெர்சியை தனித்தனியே வழங்கிய தோனி அந்த ஆவணப்படம் எடுக்கப்பட்ட விவரங்களையும் யானைகள் பராமரிப்பு விஷயங்களையும் கேட்டறிந்தார்.
Tudumm 🎬 Special occasion with very special people 💛🐘#WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/AippVaY6IO
— Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2023
இதையும் படிங்க: IPL 2023 : அட என்னப்பா இது? தோனி, வார்னரை வைத்து வித்தியாசமான பதிவை வெளியிட்ட – டெல்லி நிர்வாகம்
இறுதியில் ஆஸ்கர் விருதுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தோனி தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுமாறு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அது போக முதுமலை காப்பகத்திற்கு சென்னை நிர்வாகம் சார்பில் 5 லட்சம் நன்கொடை கொடுக்கப்பட்டது. அப்படி தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்த எலிபண்ட் விஸ்பர்ஸ் பட குழுவினருக்கு தோனி தலைமையிலான சென்னை நிர்வாகம் பாராட்டியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.



