IPL 2023 : 2011 உ.கோ ஃபைனலில் சிக்ஸருடன் வெற்றியை பெற்று கொடுத்த தோனிக்கு – வான்கடே அறிவித்த மிகப்பெரிய கெளரவம்

MS Dhoni 2011 World Cup SIx
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. என்ன தான் டி20 உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் அல்லது ஐபிஎல் போன்ற பிரீமியர் லீக் தொடர்கள் வந்தாலும் உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடருக்கு எப்போதுமே தனித்துவமான தரமும் மவுசும் இருக்கிறது. அந்த வகையில் பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா 2011க்குப்பின் இந்த கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து இம்முறை சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக 2011 உலக கோப்பையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஜஹீர் கான் போன்ற அனைத்து வீரர்களின் அற்புதமான செயல்பாடுகளால் ஃபைனலுக்கு முன்னேறியது. அதைத் தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் இலங்கை நிர்ணயித்த இலக்கை ரன்களை துரத்தும் போது சச்சின் மற்றும் சேவாக் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்து தடுமாறிய இந்தியாவை விராட் கோலியின் முக்கிய ஆட்டத்திற்கு பின் கௌதம் கம்பீர் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் ஜோடி சேர்ந்து அற்புதமாக பேட்டிங் செய்து மீட்டெடுத்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர்.

- Advertisement -

வான்கடேவில் கெளரவம்:
அதில் நங்கூரமாக விளையாடிய கௌதம் கம்பீர் கடைசி நேரத்தில் 97 ரன்களில் அவுட்டானாலும் அந்தத் தொடர் முழுவதும் தடுமாறிய தோனி முக்கிய நேரத்தில் அபாரமாக செயல்பட்டு 91* ரன்கள் விளாசி இந்தியா 28 வருடங்கள் கழித்து உலகக் கோப்பை வென்று சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணியாக சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றினார். குறிப்பாக நுவான் குலசேகரா வீசிய பந்தில் அபார சிக்சருடன் அவர் பினிஷிங் செய்ததை ரவி சாஸ்திரி வர்ணித்த தருணத்தை இப்போது நினைத்தாலும் ஒவ்வொரு இந்திய ரசிகருக்கும் புல்லரிக்கும்.

சொல்லப்போனால் உலக கோப்பை வரலாற்றில் சிக்ஸருடன் பினிஷிங் செய்த முதல் வீரர் என்ற வரலாற்றையும் தோனி அன்றைய நாளில் படைத்தார். இந்நிலையில் உலகக் கோப்பை ஃபைனலில் தோனி அடித்த சிக்சர் விழுந்த இருக்கைக்கு அவருடைய பெயரை சூட்டி கௌரவிக்க உள்ளதாக மும்பை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. குறிப்பாக தோனியின் பெயர் நிரந்தரமாக பொறிக்கப்படும் அந்த இருக்கை இனி காலத்திற்கும் வேறு எந்த ரசிகரும் அமராத வகையில் நினைவுச் சின்னமாக மாற்றப்பட உள்ளது. இது பற்றி மும்பை வாரிய தலைவர் அன்மோல் காலே கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“மைதானத்திற்குள் இருக்கும் அந்த இருக்கைக்கு எம்எஸ் தோனியின் பெயரை சூட்டுவதாக எம்சிஏ நிர்வாகம் திங்கள் கிழமை முடிவெடுத்துள்ளது. குறிப்பாக 2011 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஃபைனலில் வின்னிங் சிக்ஸர் அடித்த பந்து விழுந்த இடத்தில் அந்த நினைவுச்சின்னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை எம்எஸ் தோனி மைதானத்திற்கு வந்து திறந்து வைக்குமாறு நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

முன்னதாக நியூசிலாந்தை 2015 உலகக் கோப்பை ஃபைனலுக்கு சிக்ஸருடன் அழைத்துச் சென்ற கிரேண்ட் எலியட் அடித்த சிக்ஸர் விழுந்த இருக்கைக்கு அவருடைய பெயரை சூட்டி ஆக்லாந்து மைதானம் கௌரவித்துள்ளது. அதே போல இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மைதானத்தில் உள்ள இருக்கைக்கு ஒரு வீரரின் பெயர் சூட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க:IPL 2023 : காயமடைந்த கேன் வில்லியம்சனுக்கு பதிலாக சென்னை குறி வைத்த தரமான வீரரை வாங்கிய குஜராத் – விவரம் இதோ

அந்த வகையில் இந்தியாவிலேயே ஒரு மைதானத்தில் வரலாறு காணாத இந்த மிகப்பெரிய கௌரவத்தை வரும் ஏப்ரல் 8ஆம் தேதி மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியின் போது தோனி அவருடைய கையாலேயே திறந்து வைப்பார் என்றும் மும்பை நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் அன்றைய நாளில் அவருக்கு மும்பை நிர்வாகம் சிறப்பு நினைவு பரிசையும் வழங்கி கௌரவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement