2011 உ.கோ ஃபைனல் சிக்ஸர் அடித்த கேப்டன் தோனிக்கு வான்கடே மைதானம் கொடுத்த வரலாற்று கெளரவம்

Wankhede MS Dhoni
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா 2011க்குப்பின் தங்களது மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் இம்முறை சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், யுவராஜ் உள்ளிட்ட களமிறங்கிய அனைத்து வீரர்களின் அற்புதமான பங்களிப்பால் லீக் சுற்றில் அசத்தலாக செயல்பட்டு நாக் அவுட் சுற்றில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா மாபெரும் ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

அதை தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் இலங்கை நிர்ணயித்த இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே சேவாக் மற்றும் சச்சின் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் விராட் கோலியும் போராடி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அதனால் வெற்றி கேள்விக்குறியான போது நங்கூரமாக நின்று சரிந்த இந்தியாவை தூக்கி நிறுத்திய கௌதம் கம்பீர் 97 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து கடைசி நேரத்தில் சதத்தை நழுவ விட்டு அவுட்டானார்.

- Advertisement -

வான்கடேவில் கெளரவம்:
ஆனால் முரளிதரனை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக யுவராஜ் சிங்கிற்கு பதிலாக முன்கூட்டியே களமிறங்கிய கேப்டன் தோனி மிகச் சிறப்பாக விளையாடி 91* ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்து 28 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பையை முத்தமிட முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.. குறிப்பாக அந்தத் தொடரில் ஆரம்பம் முதலே தடுமாறிய அவர் ஃபைனலில் அபாரமாக செயல்பட்டு நுவான் குலசேகரா வீசிய பந்தில் அதிரடியான சிக்சரை பறக்க விட்டு இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது யாராலும் மறக்க முடியாது.

சொல்லப்போனால் ரவி சாஸ்திரியின் வர்ணனையுடன் அந்த சிக்சரை இப்போது நினைத்தாலும் அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் புல்லரிக்கும் என்றே சொல்லலாம். மேலும் வரலாற்றில் முதல் முறையாக உலகக்கோப்பை பைனலில் சிக்ஸருடன் ஃபினிஷிங் செய்த வீரர் என்ற சாதனையும் தோனி அன்றைய நாளில் படைத்தார். அந்த நிலையில் 12 வருடங்கள் கழித்தும் இந்திய ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள அந்த சிக்சர் விழுந்த இருக்கைகளுக்கு தோனியின் பெயர் சூட்டப்படும் என்று சமீபத்தில் மும்பை கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து ஏப்ரல் 8ஆம் தேதியன்று மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கு முன்பாக அந்த இருக்கைகளின் திறப்பு விழாவில் மும்பை நிர்வாகிகளுடன் தோனி கலந்து கொண்டார். அப்போது அவருக்கு கண்ணாடி பேழைகளை போன்ற 2 நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பெவிலியன் ஸ்டேண்ட் பகுதியில் அடிக்கப்பட்ட அந்த சிக்சர் விழுந்த ஜே282 முதல் ஜே286 வரையிலான 5 இருக்கைகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் விரைவில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட உள்ளது.

அதை திறந்து வைத்த தோனிக்கு உலக கோப்பை ஃபைனலில் சிக்சர் அடித்த போது எதிர்ப்புறம் யுவராஜ் சிங் கைகளை உயர்த்தி கொண்டாடிய புகைப்படத்தை மும்பை வாரிய நிர்வாகிகள் பரிசாக கொடுத்தனர். அந்த நிகழ்வுகள் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிறைய வரலாற்றுப் போட்டிகளை நடத்திய பெருமைக்குரிய வான்கடே கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே விரைவில் தங்களது ஊரில் பிறந்து வரலாற்று சாதனைகளை படைத்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அந்த மைதானம் சார்பில் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் வான்கடே மைதானம் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் வகையில் 2011 ஃபைனலில் சிக்ஸர் அடித்து மறக்க முடியாத தருணத்தை ஏற்படுத்தியதாலயே தோனிக்கு அந்த மைதான நிர்வாகம் இந்த கௌரவத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:LSG vs SRH : சேப்பாக்கத்தை மிஞ்சும் அளவுக்கு சுழன்ற ஏக்னா பிட்ச், சொதப்பிய ஹைதராபாத் – சிறிய இலக்கை துரத்த திணறிய லக்னோ

இப்படி சிக்சர் விழுந்த இருக்கைகளுக்கு ஒரு வீரரின் பெயர் சூட்டப்படுவது இந்தியாவிலேயே இது முதல் முறையாகும். அந்த வரலாற்று கௌரவத்தை தோனி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement