டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய டாப் 5 ரசிகர்களால் மறக்கமுடியாத ஐவர் ஜோடிகள்

Sachin Tendulkar Rahul Dravid VVS Laxman Sourav ganguly Sehwag
- Advertisement -

கிரிக்கெட்டில் பொதுவாக ஒரு அணியில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், ஆல்-ரவுண்டர்கள் என விளையாடும் 11 பேரும் தனித்தனி வேலைகளை செய்து வெற்றிகளை தேடித் தரக்கூடியவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இடம்பெறும் 11 பேரும் போட்டியை வெற்றி தரும் அளவுக்கு அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியாது என்பதாலும் இடையிடையே காயங்களை சந்தித்து சிலர் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதாலும் தொடர்ச்சியாக அந்த 11 பேரும் சேர்ந்து விளையாட முடியாது என்பது கிரிக்கெட்டின் அடிப்படை அம்சமாகும்.

ஆனால் தங்களது அபார திறமையால் உலகின் அனைத்து இடங்களிலும் அனைத்து எதிரணிகளையும் சந்தித்து சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்று கொடுக்கும் குறிப்பிட்ட சில உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மட்டும் ஒரு கட்டத்தில் அந்த அணியின் தூண்களாக மாறுவார்கள். அதாவது விளையாடும் 11 பேரில் சிலர் காயத்தால் வெளியேறினாலும் சிலர் சுமாரான செயல்பாடுகளால் வெளியேறினாலும் 4 – 5 வீரர்கள் மட்டும் எப்போதும் நிலையான இடத்தைப் பிடிப்பார்கள். நாளடைவில் அது போன்ற வீரர்கள் ஒன்றிணைந்து ரசிகர்கள் காலத்துக்கும் மறக்க முடியாத அளவுக்கு அபாரமாக செயல்பட்டு வரலாற்று வெற்றிகளை பெற்று கொடுத்து ஒரு சகாப்தத்தை ஏற்படுத்துவார்கள்.

- Advertisement -

ஐவர் ஜோடிகள்:
தூண்களாக மாறும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட தசாப்தத்தில் எதிரணிகளை ஆண்ட வீரர்களாக இறுதி வரை விளையாடி ஓய்வு பெறும் போது ஒரு சகாப்தம் முடிந்தது என்ற உணர்வை ரசிகர்களிடம் காலத்திற்கும் விட்டுச் செல்வார்கள். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் இணைந்து விளையாடிய ஐவர் ஜோடிகளைப் பற்றி பார்ப்போம்.

5. மர்வான் அட்டப்பட்டு, சனத் ஜெயசூர்யா, மகிளா ஜெயவர்தனே, முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ் 54: 90களின் இறுதியில் இணைந்து 2010 வரையிலான தசாப்தத்தில் சர்வதேச அரங்கில் இலங்கை கொடிகட்டிப் பறப்பதற்கு முக்கிய காரணமாக மர்வான் அட்டப்பட்டு, சனத் ஜெயசூர்யா, மகிளா ஜெயவர்தனே ஆகியோர் பேட்டிங்கில் தூண்களாக செயல்பட்டார்கள் என்றால் முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்தா வாஸ் ஆகியோர் சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சு ஜோடியாக இணைந்து எதிரணிகளை தங்களது அபார பந்துவீச்சால் திணறடித்தார்கள்.

- Advertisement -

அந்த காலகட்டத்தில் இலங்கையின் தூண்களாக மாறிய இவர்கள் 54 போட்டிகளில் இணைந்து விளையாடி நிறைய சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றி இந்த பட்டியலில் 5-வது இடம் பிடிக்கின்றனர். இது போன்ற தரமான வீரர்கள் ஒன்றாக கிடைக்காமல் தான் தற்போதைய இலங்கை அணி தடுமாறி வருகிறது.

4. ஸ்டீவ் வாக், மார்க் வாக், மார்க் டெய்லர், இயன் ஹீலி, ஷேன் வார்னே 55: 80களின் இறுதியில் எழுச்சி கண்ட ஆஸ்திரேலியா இப்போது வரை உலக கிரிக்கெட்டை ஆள்வதற்கு 90களில் விளையாடிய அந்நாட்டு வீரர்கள் ஆழமான அடித்தளத்தை போட்டார்கள் என்று கூறலாம். அந்த சமயத்தில் இரட்டை சகோதர்களாக அறிமுகமாகி அசத்திய ஸ்டீவ் வாக், மார்க் வாக் ஆகியோரது அணியில் மார்க் டெய்லர் ஒரு நல்ல பேட்ஸ்மேனாக விளையாடினார்.

- Advertisement -

அந்த காலகட்டத்தில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக இயன் ஹீலி சேர்ந்து அசத்த அவர்களுடன் வரலாற்றில் மகத்தான சுழல் பந்து வீச்சாளராக சாதனை படைத்த ஷேன் வார்னே தனது ஆரம்ப காலங்களில் விளையாடினார். 90களில் 55 போட்டிகளில் இணைந்து விளையாடிய இவர்கள் இப்பட்டியலில் 4-வது இடம் பிடிக்கின்றனர்.

3. விவ் ரிச்சர்ட்ஸ், கோர்டன் க்ரீனிட்ஜ், டெஸ்மண்ட் ஹைன்ஸ், மால்கம் மார்ஷல், ஜெப் டூஜோன் 58: 90களில் ஏற்பட்ட ஆஸ்திரேலியாவின் எழுச்சிக்கு முன்பாக உலக கிரிக்கெட்டை தங்களது முரட்டுத்தனமான அதிரடியான ஆட்டத்தால் வெஸ்ட்இண்டீஸ் தான் கட்டுக்குள் வைத்திருந்தது. குறிப்பாக 70 மற்றும் 80களில் மிரட்டிய அந்த அணியில் விவ் ரிச்சர்ட்ஸ் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

- Advertisement -

அவருடன் கோர்டன் க்ரீனிட்ஜ், டெஸ்மண்ட் ஹைன்ஸ் ஆகியோரும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களாக வலம் வந்த அந்த அணியில் ஜெப் டூஜோன் விக்கெட் கீப்பராகவும் மால்கம் மார்ஷல் எதிரணி பேட்ஸ்மேன்களின் மண்டையை காலி செய்யும் வெறித்தனமான பவுலராக இருந்ததையும் அந்த காலத்து ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஐவர் ஜோடி 58 போட்டிகளில் இணைந்து விளையாடி 35 வெற்றிகளை ருசித்து 17 போட்டிகளை ட்ரா செய்தது. 6 போட்டிகளில் மட்டுமே தோற்றது.

2. கிரேம் ஸ்மித், ஹாஷிம் அம்லா, ஏபி டிவில்லியர்ஸ், ஜாக் காலிஸ், டேல் ஸ்டெயின் 60: 2000 – 2015 வரையிலான காலகட்டங்களில் உலக கிரிக்கெட்டில் தங்களுக்கென்று தனி முத்திரையை தென் ஆப்பிரிக்கா பதிப்பதற்கு கிரேம் ஸ்மித் தலைவராக செயல்பட்ட நிலையில் அவரது தலைமையில் தளபதிகளை போல் ஹாஷிம் அம்லா மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் அற்புதமான பேட்ஸ்மேன்களாகவும் ஜாம்பவான் ஜாக் காலிஸ் வரலாற்றின் மகத்தான ஆல்ரவுண்டராகவும் டேல் ஸ்டெயின் சச்சின் உட்பட அனைவரையும் தெறிக்கவிட்ட பவுலராகவும் மிரட்டினர்.

இந்த பெயர்களே அவர்களது தரத்தை தெரிவிக்க போதுமானது என்ற நிலைமையில் 60 போட்டிகளில் விளையாடிய இந்த ஐவர் ஜோடிக்கு மாற்று வீரர்கள் கிடைக்காததால் தற்போது தென் ஆப்பிரிக்கா தடுமாறி வருவது நிதர்சனம்.

1. சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன், அனில் கும்ப்ளே 65: 80களின் கடைசியில் 16வயது பிஞ்சு கால்களுடன் அறிமுகமாகி உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை எதிர்கொண்டு அவர்களைவிட உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக அவதரித்த சச்சின் டெண்டுல்கருடன் 1996இல் ஒரே போட்டியில் அறிமுகமாகி இரட்டை குழல் துப்பாக்கிகளைப் போல் அசத்திய ராகுல் டிராவிட் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் பேட்டிங் துறையில் தூண்களாக அவதரித்தனர்.

இவர்களுடன் ஆஸ்திரேலியாவை ஆள்வதற்கென்றே பிறந்த விவிஎஸ் லக்ஷ்மன் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய அனில் கும்ப்ளே ஆகியோர் அடுத்த சில வருடங்களில் ஜோடி சேர்ந்து 21-ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் இந்தியாவுக்கு சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்ததை ரசிகர்கள் மறக்க முடியாது. அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இந்த ஐவர் ஜோடி உலகிலேயே அதிக பட்சமாக 65 போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளது. அதில் 19 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா 25 போட்டிகளை டிரா செய்து. 21 போட்டியில் தோற்றது.

Advertisement