டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் இணைந்து விளையாடிய டாப் 5 ஜோடிகள்

SUnil Gavaskar Kapil Dev
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தனது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே ஒரு கிரிக்கெட் வீரரின் அடிப்படையான ஆசையாக இருக்கும். அதற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு தேசிய அணிக்குள் நுழையும் வீரர்கள் ஆரம்பத்தில் தடுமாறினாலும் ஒரு குறிப்பிட்ட தருணத்துக்கு பின் 10இல் 7 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே மேற்கொண்டு தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும். அந்த வகையில் தரமான வீரர்கள் மட்டுமே தங்களது தொடர்ச்சியான செயல்பாடுகளால் நிலையான இடத்தைப் பிடித்து நிறைய வருடங்கள் விளையாட முடியும். ஒரு கட்டத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுக்கும் சில வீரர்கள் அந்த அணியிலிருந்து நீக்க முடியாத அளவுக்கு தூண்களாக மாறி அடையாளமாக உருவெடுப்பார்கள்.

அதுபோன்ற வீரர்கள் சவாலான எதிரணிகளுக்கு எதிராக ஜோடி சேர்ந்து இரட்டை குழல் துப்பாக்கிகளைப் போல இணைந்து பெரும்பாலான போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளை பெற்று கொடுப்பார்கள். ஆனால் அந்த நட்சத்திர 2 வீரர்கள் ஜோடி தொடர்ச்சியாக நிறைய வருடங்கள் இணைந்து விளையாடுவது அரிதாக நடக்கக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் அந்த 2 வீரர்களும் அணியில் நிலைத்து நிறைய வருடங்கள் விளையாடும் அளவுக்கு தொடர்ச்சியாக நல்ல பார்மில் வெற்றிகளை பெற்று கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். மற்றொன்று அந்த 2 வீரர்களில் இருவருமே காயமடையாமல் இருந்தால் தான் இணைந்து விளையாட முடியும்.

- Advertisement -

இணைந்த கைகள்:
அந்த வகையில் நூற்றாண்டு சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் இணைந்து விளையாடிய டாப் 5 ஜோடிகளின் அரிதான பட்டியலைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்:

5. ஆலன் பார்டர் – இயன் ஹீலி 62: 80களின் இறுதியில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வலம் வந்த இந்த ஜோடியில் ஆஸ்ட்ரேலியாவுக்கு முதல் முறையாக உலக கோப்பையை வென்று கொடுத்த மகத்தான கேப்டனாக சரித்திரம் படைத்த ஆலன் பார்டர் அந்த கால கட்டங்களில் நிறைய வருடங்கள் கேப்டனாகவும் சிறந்த பேட்ஸ்மேனாகவும் செயல்பட்டார்.

- Advertisement -

அவரது அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அசத்திய இயன் ஹீலி அந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவின் முதன்மை விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அந்த வகையில் 1988 – 1994 வரை ஆஸ்திரேலியா விளையாடிய 62 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக இணைந்து விளையாடிய இவர்கள் இப்பட்டியலில் 5-வது இடம் பிடிக்கின்றனர்.

4. சுனில் கவாஸ்கர் – கபில் தேவ் 66: இந்தியாவில் இன்று கிரிக்கெட் இவ்வளவு பிரபலமாக இருப்பதற்கு இந்த இருவரும் மிக முக்கியமானவர்கள் என்றே கூறலாம். இதில் கேப்டனாகவும் உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டராகவும் அசத்திய கபில் தேவ் 1983 உலக கோப்பையை வென்று இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்தார்.

- Advertisement -

அதேபோல் 80களின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் அசால்டாக எதிர்கொண்டு 10000 ரன்களைக் குவித்த முதல் பேட்ஸ்மேனாக வரலாற்றுச் சாதனை படைத்த கவாஸ்கர் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல இளம் வீரர்கள் தங்களது கையில் பேட்டை எடுக்க உந்து கோளாக இருந்தார். அப்படிப்பட்ட இந்த மகத்தான ஜோடி 1978 – 1984 வரை இந்தியா பங்கேற்ற 66 டெஸ்ட் போட்டிகளிலும் ஒன்றைக்கூட தவறவிடாமல் இணைந்து விளையாடி இப்பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறது.

3. ஹாசிம் அம்லா – ஏபி டீ வில்லியர்ஸ் 68: நவீன கிரிக்கெட்டின் 2 மகத்தான பேட்ஸ்மேன்களாக போற்றப்படும் இவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு ஏராளமான வெற்றிகளை கொடுத்த வீரர்களாக போற்றப்படுகின்றனர்.

- Advertisement -

இதில் அம்லா தொடக்க வீரராக ரன்களையும் சதங்களையும் விளாசி அசத்தினார் என்றால் கேப்டன், விக்கெட் கீப்பர், மிரட்டலான பினிஷர் என பன்முக திறமையுடன் ஏபி டிவிலியர்ஸ் தென் ஆப்பிரிக்காவின் ஹீரோவாக செயல்பட்டார். 2006 – 2013 வரையிலான காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்காக 68 போட்டிகளில் ஒன்றைக்கூட விடாமல் இணைந்து விளையாடிய இவர்கள் மிகச் சிறந்த ஜோடியாக இப்பட்டியலில் 3-ஆம் இடம் பிடிக்கின்றனர்.

2. சுனில் கவாஸ்கர் – குண்டப்பா விஸ்வாநாத் 69: இந்த ஜோடியில் குண்டப்பா விஸ்வநாத் பற்றி தற்காலத்தில் இருக்கும் ரசிகர்கள் பெரும்பாலும் அறிந்திருக்க முடியாது. 70களின் இறுதியில் இந்தியாவின் மகத்தான பேட்ஸ்மேனாக வலம் வந்த இவர் வேகம் மற்றும் சுழல் என அனைத்து வகையான பந்துகளையும் அற்புதமாக எதிர்கொண்டு 91 போட்டிகளில் 6080 ரன்களைக் குவித்தார்.

எத்தனையோ பேட்ஸ்மேன்களுடன் இணைந்து விளையாடி பார்ட்னர்ஷிப் போட்ட தமக்கு குண்டப்பா விஸ்வநாத் தான் மிகவும் பிடித்தவர் என்று சுனில் கவாஸ்கர் இப்போதும்கூட பாராட்டுவார். அந்த அளவுக்கு 1975 – 1983 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவுக்காக 69 போட்டிகளில் இணைந்து விளையாடிய இந்த ஜோடி நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ஜோடியாக என்றும் அந்த காலத்து ரசிகர்களின் மனதில் இன்றும் நிற்கிறது என்று கூறலாம்.

1. ஆடம் கில்கிறிஸ்ட் – மேத்தியூ ஹெய்டன் 86: 90களின் இறுதியில் அறிமுகமாகி 2000-ஆம் ஆண்டு வாக்கில் ஸ்டீவ் வாக் மற்றும் ரிக்கி பாண்டிங் என்ற 2 மகத்தான கேப்டன்கள் உலகை ஆளுவதற்கு இந்த இருவரும் படை வீரர்களைப் போல் செயல்பட்டார்கள் என்று கூறினால் மிகையாகாது. அதிலும் ஒரு கட்டத்தில் தொடக்க வீரர்களாக ஜோடி சேர்ந்த இவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய மிரட்டல் ஜோடியாக வலம் வந்தது.

2000 – 2008 வரை நிரந்தரமான விக்கெட் கீப்பராகவும் நிரந்தரமான தொடக்க வீரராகவும் ஆஸ்திரேலியாவுக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இந்த ஜோடி 86 போட்டிகளில் தொடர்ச்சியாக ஒன்றை கூட தவற விடாமல் பங்கேற்று டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் தொடர்ச்சியாக இணைந்து விளையாடிய ஜோடியாக சாதனையும் படைத்துள்ளது.

Advertisement