
அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்து வந்த ராகுல் டிராவிட் தனது பதவியில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தீவிர தேடலுக்கு பின்னர் இந்திய அணியின் அடுத்த புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரரான கௌதம் கம்பீரை நியமித்தது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை வெற்றிகரமாக வழிநடத்திற்காகவே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் டிராவிடின் கீழ் வேலை செய்த பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே ஆகியோரது பதவிக்காலமும் முடிவடைந்தது.
இதன் காரணமாக தனக்கென தனியாக பயிற்சியாளர் குழுவை ஒருங்கிணைக்க பிசிசிஐ-யிடம் கம்பீர் கேட்டுக் கொண்டார். அந்தவகையில் பிசிசிஐ-யிடம் அவருக்கு ஏற்றவாறு துணை பயிற்சியாளராக அபிஷேக் நாயரையும், மற்றொரு துணை பயிற்சியாளராக ரியான் டென் டெஸ்காத்தேவை நியமனம் செய்ய கேட்டுக்கொண்டார்.
அதேபோன்று பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கலையும் நியமிக்குமாறு பி.சி.சி.ஐ-யிடம் பரிந்துரை செய்திருந்தார். பீல்டிங் பயிற்சிக்காக திலீப் தொடர்வார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இவர்களது முதல் தொடராக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரில் இவர்களது நியமனம் அதிகாரவபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவானான மோர்கல் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியுடன் பயணிக்க முடியாது என்று தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க : அழுக்கா பேசாதீங்க.. நீங்க சொன்னது தப்பு.. ரோஹித் சொன்னதுமே முடிஞ்சு போச்சு.. ஷமிக்கு சல்மான் பட் பதிலடி
ஏனெனில் தனது தந்தையின் உடல் நலக்குறைவு காரணமாக சிட்னியில் இருந்து அவர் தென்னாபிரிக்கா பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் சொந்த காரணங்களால் அவரால் இந்த தொடரில் இணைய முடியாது என்றும் இந்த தொடருக்கு அடுத்து அவர் இந்திய அணியுடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது.