
இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மெகா தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்த இந்தியா தொடர்ச்சியாக அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 3வது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற இந்தியா 4வது போட்டியிலும் வெற்றி பெறுவது அசாத்தியமாகியுள்ளது. முன்னதாக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா பணிச்சுமையை நிர்வகித்து காயத்தை தவிர்ப்பதற்காக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி 2வது போட்டியில் ஓய்வெடுத்த அவர் 3, 4வது போட்டிகளில் விளையாடினார்.
ஆனால் 4வது போட்டியின் 3வது நாளில் முழுமையாக பவுலிங் செய்யாத அவர் லேசான காயத்துடன் வெளியேறி ஓய்வெடுத்து மீண்டும் வந்தார். அதே போல முகமது சிராஜும் மாலை வேளையில் லேசான வலியை சந்தித்ததால் பந்து வீசாமல் வெளியேறி விட்டு மீண்டும் வந்தார். அதற்கு முன்பாக நிதிஷ் ரெட்டி, ஆகாஷ் தீப் ஆகியோர் காயத்தால் வெளியேறியது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது.
இந்நிலையில் இந்திய வீரர்கள் இப்படி பணிச்சுமையால் பாதிக்கப்பட்டு காயங்களைச் சந்திப்பதற்கு ஐபிஎல் தான் காரணம் என்று பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது உண்மையான சோதனை. நாங்கள் பெரும்பாலும் 2 அல்லது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் நிறைய விளையாடியுள்ளோம்”
“நாங்கள் நீண்ட காலம் கழித்து 5 போட்டிகளில் விளையாட வருவது இதுவே முதல் முறை. அது ஒரு சாக்காக இருக்கக்கூடாது. ஆனால் கண்டிஷனிங் அடிப்படையில் ஐபிஎல் தொடரிலிருந்து எங்கள் வீரர்களை நேராக 5 டெஸ்ட் போட்டிகளில் வந்து விளையாடுவதற்கு தயார்படுத்துவதில் சில நேரங்களில் சிக்கல் இருக்கலாம். நீங்கள் வீரர்களுக்கு போதுமான மீட்பு நேரத்தை வழங்குவதற்கும் அவர்களின் பந்து வீச்சு சுமைகளைப் பராமரிப்பதற்கும் இடையே சரியான சமநிலையைக் கண்டறிய வேண்டும்”
இதையும் படிங்க: டிராவிட், புஜாரா மாதிரி அந்த இடத்தில் சாய் சுதர்சனால் அசத்த முடியும் – ரவிச்சந்திரன் அஷ்வின் நம்பிக்கை
“அதனாலேயே வருங்காலத்தில் சுழற்சி முறையில் பயன்படுத்துவதற்காக 5 அல்லது 6 திடமான பவுலர்களை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். அப்போது தான் புதிதாக வருபவர்கள் வேலையை செய்வார்கள்” என்று கூறினார். முன்னதாக ஐபிஎல் முடிந்ததும் நடந்த 2021, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளில் விளையாடி இந்தியா தோற்றது. அப்போதிலிருந்தே வெளிநாட்டு டெஸ்ட் போட்டுக்களில் இந்தியா தோற்க ஐபிஎல் ஒரு காரணமாக இருப்பதாக ஒரு விமர்சனம் இருக்கிறது. அதை தற்போது மோர்கெல் உடைத்து பேசியுள்ளதால் பிசிசிஐ கவனிக்குமா என்பதைப் பார்ப்போம்.