விராட், ரோஹித் இல்லை – 2 இந்திய வீரர்களுக்கு இடம், ஐசிசி வெளியிட்ட 2022ஆம் ஆண்டின் சிறந்த கனவு ஒருநாள் அணி இதோ

Shreyas Iyer IND
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 2022ஆம் ஆண்டு காலண்டர் வருடத்தில் சிறந்து விளங்கிய வீரர் மற்றும் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் விருதுகளை அறிவித்து ஐசிசி கௌரவித்து வருகிறது. அதில் முதலாவதாக 2022ஆம் ஆண்டு சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடங்கிய கனவு அணியை ஐசிசி வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் முதலாவதாக 2022ஆம் ஆண்டு சிறந்து விளங்கிய வீரர்களை கொண்ட கனவு டி20 அணியை ஐசிசி நேற்று வெளியிட்டது. 2022 டி20 உலக கோப்பை வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் இந்தியாவிலிருந்து நம்பிக்கை நாயகன் விராட் கோலி, லேட்டஸ்ட் நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் மற்றும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பிடித்து நாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.

அதே போல் மகளிர் டி20 கனவு அணியில் இந்தியாவிலிருந்து ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரிச்சா கோஸ், ரேணுகா சிங் ஆகிய 4 வீராங்கனைகள் இடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கௌரவிக்கும் வகையில் 11 பேர் கொண்ட கனவு அணியை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அந்த அணிக்கு 2022இல் 679 ரன்களை 84.87 என்ற சராசரியில் குவித்த பாகிஸ்தான் நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் தலைமை தாங்குவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

- Advertisement -

2 இந்தியர்கள்:
அந்த அணியில் பேட்டிங் துறையில் இந்தியாவிலிருந்து இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பிடித்து அசத்தியுள்ளார். கடந்த வருடம் 17 போட்டியில் 6 அரை சதங்கள் 1 சதம் உட்பட 724 ரன்களை 55.69 என்ற சராசரியில் 91.52 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த அவர் 2022 ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனை படைத்தார். அந்த வகையில் மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அசத்தும் அவர் 2023 உலகக்கோப்பை அணியில் விளையாடுவார் என்று பார்க்கப்படும் நிலையில் தங்களது கனவு அணியிலும் இடம் பிடிப்பதாக ஐசிசி பாராட்டியுள்ளது.

மேலும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறும் பலவீனத்தையும் தாண்டி விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களை கடந்து அதிக ரன்கள் குவித்து ஐசிசி அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு அசத்தியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இந்த அணியில் வேகப்பந்து வீச்சு துறையில் இந்தியாவிலிருந்து முகமது சிராஜ் தேர்வாகி அசத்தியுள்ளார்.

- Advertisement -

கடந்த வருடம் 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை 4.62 என்ற மிகச் சிறந்த எக்கனாமியில் 23.50 என்ற சிறப்பான சராசரியில் எடுத்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்தார். அதிலும் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத குறை தெரியாத அளவுக்கு பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு வரும் அவர் 2023 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு முன்பாக தங்களது கனவு அணியில் இடம் பிடித்துள்ளதாக ஐசிசி பாராட்டியுள்ளது.

இவர்களை தவிர்த்து ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், வெஸ்ட் இண்டீஸின் ஷாய் ஹோப், நியூசிலாந்தின் டாம் லாதம் ஆகியோர் பேட்டிங் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர்கள் பிரிவில் ஜிம்பாப்வே அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சிக்கந்தர் ராசா கடந்த மாதம் இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடிக்க கருப்பு குதிரையாக செயல்பட்ட வங்கதேசத்தின் மெஹதி ஹசன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

- Advertisement -

இந்த அணியில் முதன்மை ஸ்பின்னராக ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா தேர்வாகியுள்ள நிலையில் இதர வேகப்பந்து வீச்சாளராக நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் அல்சாரி ஜோசப் ஆகியோர் தேர்வாகி தங்களது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். 2022 ஐசிசி கனவு ஒருநாள் அணி இதோ:

இதையும் படிங்க: IND vs NZ : உலகின் நம்பர் ஒன் அணியை சாய்த்து புதிய மகுடம் சூடிய இந்தியா, அபார வெற்றி பெற்றது எப்படி?

பாபர் அசாம் (கேப்டன்), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), ஷாய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்), ஸ்ரேயாஸ் ஐயர் (இந்தியா), டாம் லாதம் (கீப்பர் – நியூஸிலாந்து), சிகந்தர் ராசா (ஜிம்பாப்வே), மெஹதி ஹசன் (வங்கதேசம்), அல்சாரி ஜோசப் (வெஸ்ட் இண்டீஸ்), முகமது சிராஜ் (இந்தியா), ட்ரெண்ட் போல்ட் (நியூஸிலாந்து), ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா)

Advertisement