2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலைமையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசிப் போட்டி ஜனவரி 24ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கியது. அதில் குறைந்தபட்சம் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கும் சுப்மன் கில் – ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கு சாதகமாக இருந்த மைதானத்தில் சுமாராக பந்து வீசிய நியூஸிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தனர். நேரம் செல்ல செல்ல நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட இந்த ஜோடி 212 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த போது கேப்டன் ரோகித் சர்மா 507 நாட்கள் கழித்து சதமடித்து 9 பவுண்டரி 6 சிக்சருடன் 101 (85) ரன்கள் விளாசி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து அவுட்டானார்.
புதிய மகுடம்:
அவருடன் மறுபுறம் அசத்திய சுப்மன் கில் 13 பவுண்டரி 5 சிக்ஸருடன் சதமடித்து 112 (78) ரன்கள் குவித்து அவுட்டான நிலையில் அடுத்து வந்த இஷான் கிசான் தடவலாக செயல்பட்டு 17 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் அதிரடி காட்ட முயன்ற விராட் கோலி 3 பவுண்டரி 1 சிக்சடன் 36 (27) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் பெரிதும் பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் 2 சிக்ஸருடன் 14 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 9 (14) ரன்களில் அவுட்டானாலும் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 3 பவுண்டரி 3 சிக்சருடன் 54 (38) ரன்களும் ஷார்துல் தாகூர் 25 (17) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதனால் 50 ஓவரில் இந்தியா 385/9 ரன்கள் குவித்து அசத்திய நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டூபி மற்றும் டிக்ஃனர் தலா 3 டிக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து 386 என்ற கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு முதல் ஓவரிலேயே ஃபின் ஆலன் கோல்டன் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே அடுத்து வந்த ஹென்றி நிக்கோலஸ் உடன் இணைந்து அதிரடியாக ரன்களை சேர்த்தார்.
2வது விக்கெட்டுக்கு சிறப்பாக செயல்பட்டு 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் ஹென்றி நிக்கோலஸ் 42 (40) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த டார்ல் மிட்சேல் 24 (31) டாம் லாதம் 0 (1) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒரே ஓவரில் காலி செய்த ஷார்துல் தாகூர் அதிரடி வீரர் அடுத்த சில ஓவர்களில் கிளன் பிலிப்ஸை 5 (7) ரன்களில் அவுட்டாக்கினார். ஆனாலும் மறுபுறம் அசத்தலாக பேட்டிங் செய்து சதமடித்த டேவோன் கான்வே 12 பவுண்டரி 8 சிக்ஸருடன் 138 (100) ரன்களை விளாசி உம்ரான் மாலிக் வேகத்தில் போராடி அவுட்டானார்.
An exceptional knock from Devon Conway 🙌#INDvNZ | 📝: https://t.co/61sExvwsgY pic.twitter.com/Y1DSppFS7p
— ICC (@ICC) January 24, 2023
அதை பயன்படுத்திய இந்தியா மைக்கேல் பிரேஸ்வெல் 26, மிட்சேல் சாட்னர் 34 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவதற்கு முன்பாகவே சொற்ப ரன்களில் காலி செய்தது. அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 41.2 ஓவரில் 295 ரன்களுக்கு அவுட்டான நியூசிலாந்து பரிதாபமாக தோற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் ஆரம்பம் முதல் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் ஷார்துல் தாகூர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதனால் 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் செய்து இத்தொடரின் கோப்பையை வென்று சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதை மீண்டும் நிரூபித்தது. அதை விட இந்த தொடர் வெற்றிகளால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஐசிசி தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறிய இந்தியா உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
The new No.1 team in the @MRFWorldwide ICC Men's ODI Team Rankings 🤩
More 👉 https://t.co/sye7IF4Y6f pic.twitter.com/hZq89ZPO31
— ICC (@ICC) January 24, 2023
இதையும் படிங்க: IND vs NZ : இப்படியா ரன்னை வாரி குடுப்பீங்க. இந்திய அணியால் சிதறடிக்கப்பட்ட நியூசி பவுலர் – மோசமான சாதனை
குறிப்பாக இத்தொடரின் ஆரம்பத்தில் உலகின் நம்பர் ஒன் அணியாக களமிறங்கிய நியூசிலாந்தை சாய்ந்துள்ள இந்தியா அந்த மகுடத்தை தனதாக்கும் அளவுக்கு தரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளது இந்திய ரசிகர்களை பெருமையடைய வைத்தது. மறுபுறம் நியூசிலாந்து 3வது இடத்துக்கு சரிந்துள்ளது.