நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
முகமது ஷமி நிகழ்த்திய அசத்தல் சாதனை :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக அப்துல் சமாத் 36 ரன்களையும், மிட்சல் மார்ஷ் 35 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 17.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 70 ரன்களையும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 39 ரன்களையும் குவித்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 4 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக டெல்லி அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுலை அவர் போட்டியின் முதல் பந்திலேயே வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை முதல் நபராக நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க : அக்சர் படேல் இம்முறை நிறைய ஓவர்கள் இதற்காகவே வீசியாக வேண்டும் – டேல் ஸ்டெயின் கருத்து
அதாவது ஐபிஎல் போட்டிகளில் முதல் பந்திலேயே அதிக முறை விக்கெட் எடுத்த பவுலர் என்ற பட்டியலில் தற்போது முகமது ஷமி முதல் இடத்திற்கு சென்றுள்ளார். இதுவரை தான் விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் முகமது ஷமி ஐந்து முறை போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



