ஐ.பி.எல் 2024-ல் இருந்து விலகிய முகமது ஷமி.. அப்படி என்ன பிரச்சனை தெரியுமா? – விவரம் இதோ

Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் முகமது ஷமி கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 450 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் முகமது ஷமி ஐபிஎல் தொடரிலும் அனுபவம் வாய்ந்த வீரராக திகழ்ந்து வருகிறார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 2013-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 110 போட்டிகளில் பங்கேற்று 127 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமான ஆண்டிலேயே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய போது அந்த அணிக்காக 28 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டும் அவரது செயல்பாடும் மிகச் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக முகமது ஷமி தரப்பிலிருந்து ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரிலும் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது. இதற்கு காரணம் யாதெனில் : இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்துடனே ஷமி தொடர்ந்து பந்துவீசி வந்தார். அதன் பின்னர் உலககோப்பை முடிந்த கையோடு அந்த காயத்திற்கான சிகிச்சையும் அவர் மேற்கொண்டு வந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாத அவர் லண்டன் சென்று தனது காயத்திற்காக சில ஊசிகளையும் போட்டுக் கொண்டார். ஆனால் அப்படி இருந்தும் அந்த வலி குறையவில்லை. இந்நிலையில் முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஜெய் ஷா பேச்சை யாருமே கேட்கல.. என்சிஏ’வில் இருந்து அனுப்பப்பட்ட மெயில்.. சிக்கிய ஸ்ரேயாஸ் ஐயர்

இதன் காரணமாக அவர் லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதினால் அடுத்த சில மாதங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக அவர் இந்திய அணிக்கு திரும்புவதற்கு குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement