இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முகமது ஷமி கடந்த 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் விளையாடினார். அந்த தொடரில் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதிலிருந்து தற்போது குணமடைந்துள்ள அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் பயணத்தில் இருக்கிறார்.
முன்னதாக ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வந்த ஷமி கடந்த சீசனில் காயத்தால் விளையாடவில்லை. அதனால் 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக அவரை குஜராத் அணி நிர்வாகம் தக்க வைக்காமல் கழற்றி விட்டுள்ளது. அந்த சூழ்நிலையில் அடிக்கடி காயத்தை சந்திக்கும் முகமது ஷமியை எந்த அணியும் பெரிய தொகைக்கு வாங்காது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் சமீபத்தில் கூறியிருந்தார்.
மஞ்ரேக்கர் விமர்சனம்:
அதன் காரணமாக 2025 ஐபிஎல் ஏலத்தில் ஷமியின் சம்பளம் கடந்த வருடத்தை விட வெகுவாக குறையலாம் என்று அவர் தெரிவித்திருந்தார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஷமியை வாங்குவதற்கு கண்டிப்பாக அணிகளிடமிருந்து ஆர்வம் இருக்கும். ஆனால் ஷமி காயங்கள் சந்தித்த வரலாறு அதிகம். சமீபத்திய காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமடைந்து வருவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டார்”
“எனவே ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர் பாதியிலேயே காயத்தை சந்திப்பதற்கு வாய்ப்புள்ளது. அதன் காரணமாக ஏதேனும் ஒரு ஐபிஎல் அணி அவர் மீது அதிகப்படியான தொகையை முதலீடு செய்து பின்னர் ஷமி காயத்தால் வெளியேறினால் அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம். அதனால் அவருடைய சம்பளத்தில் பெரிய சரிவு ஏற்படும் கவலை இருக்கிறது” என்று கூறினார்.
ஷமி பதிலடி:
இந்நிலையில் இப்படியெல்லாம் சொல்லி நீங்களே என்னுடைய சம்பளத்தை குறைக்காமல் வாழ விடுங்க பாபா என்ற வகையில் அவருக்கு ஷமி பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பாபா ஜி க்கு ஜெய் ஹோ. உங்களுடைய அறிவை கொஞ்சம் உங்கள் எதிர்காலத்திற்காகவும் பயன்படுத்துங்கள். யாராவது எதிர்காலத்தை தெரிந்து கொள்ள விரும்பினால் அவர்களை சந்திக்கவும் ஐயா” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா – ஆஸி முதல் டெஸ்ட் நடைபெறும் ஆப்டஸ் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
குறிப்பாக எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது என்று ஷமி தெரிவித்துள்ளார். எனவே தம்முடைய ஐபிஎல் சம்பளத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று அவருக்கு ஷமி கிண்டலான பதிலடி கொடுத்துள்ளார். இதை அடுத்து ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவதற்காக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.



