ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடரையும் முதல் முறையாக வென்று இந்தியா வரலாறு படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது.
ஆனால் இம்முறை சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது. மறுபுறம் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போல இம்முறை இந்தியாவை வீழ்த்தி கடந்த 2 தொடர்களில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது.
ஆப்டஸ் மைதானம்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகிலேயே பெர்த் நகரில் இயற்கையாகவே அதிகப்படியான பவுன்ஸ் இருக்கும். அங்கே இருந்த வாகா மைதானத்தில் மிகவும் ஆபத்தான பவுன்ஸ் இருந்ததால் அந்த மைதானத்தை மூடி விட்டு தற்போது ஆஸ்திரேலிய வாரியம் அருகிலேயே ஆப்டஸ் மைதானத்தை திறந்துள்ளது.
2017இல் கட்டமைக்கப்பட்ட அந்த மைதானத்தில் இதுவரை இந்தியா 1 போட்டியில் விளையாடி தோல்வியை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியா இங்கே 4 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள்ளது. இங்கு அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களாக விராட் கோலி (140), ஷமி (6) முதல் இடத்தில் உள்ளனர்.
ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மொத்தம் 107 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 32 வெற்றிகளையும் ஆஸ்திரேலியா 45 வெற்றிகளையும் பெற்றது. 1 போட்டி சமனிலும் 29 போட்டிகள் ட்ராவிலும் முடிந்தன.
வெதர் ரிப்போர்ட்:
பெர்த் நகரில் 5 நாட்களும் மழை பெய்வதற்கு 20% மட்டுமே வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இந்த போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
ஆப்டஸ் மைதானத்தின் பிட்ச்சில் வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்று அதன் தயாரிப்பாளர் ஐசக் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். எனவே ஆரம்பக்கட்ட நாட்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங், வேகம் ஆகியவற்றை கலந்து சவாலை கொடுத்து விக்கெட்டுகளை எடுப்பார்கள். அதை சமாளித்து ரன்கள் குவிக்க பேட்ஸ்மேன்கள் சூழ்நிலையை உணர்ந்து நங்கூரமாக விளையாடுவது அவசியமாகிறது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் போட்டியிலேயே பிரமாண்ட சாதனை நிகழ்த்தவிருக்கும் – ரவி அஷ்வின்
போட்டியின் இரண்டாவது பகுதியில் ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்த மைதானத்தில் 456, 250, 218, 183 என்பது சராசரி 4 இன்னிங்ஸ்களின் ஸ்கோராகும். இங்கு நடைபெற்ற 4 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.



