
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பிப்ரவரி 20ஆம் தேதி துபாயில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 229 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 41, கில் 101*, ராகுல் 41* ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார்கள்.
இந்தியாவுக்கு பந்து வீச்சில் முகமது ஷமி அதிகபட்சமாக 53 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 1998 முதல் 2017 வரை ஜஹீர் கான் முதல் பும்ரா வரை வேறு எந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை.
அதை தன்னுடைய முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலேயே ஷமி எடுத்துள்ளார். இதன் வாயிலாக தனது முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சிறந்த பந்து வீச்சை (5/53) பதிவு செய்த இந்திய பவுலர் என்ற சச்சின் டெண்டுல்கரின் 27 வருட சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 1998 சாம்பியன்ஸ் ட்ராபியில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.
மேலும் 50 ஓவர், 20 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் ஷமி 74* விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதன் வாயிலாக ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ஜஹீர் கான் சாதனையை உடைத்துள்ள ஷமி புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ஜஹீர் கான் 71 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.
ஒருநாள் கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் வேகமாக 200 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் 5240 பந்துகளில் 200 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். ஷமி 5126 பந்துகளில் 200 விக்கெட்டுகள் எடுத்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: தல தோனி, யுவ்ராஜ், விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரை முந்திய ஹிட்மேன் ரோஹித் சர்மா.. படைத்த 2 சாதனைகள்
அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் போட்டிகள் அடிப்படையில் 200 விக்கெட்டுகளை வேகமாக எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் அஜித் அகர்கர் 133 போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் ஷமி 104 போட்டிகளிலேயே எடுத்துள்ளார். மேலும் ஐசிசி தொடர்களில் 5 முறை 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.