
துபாயில் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிய முக்கியமான போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தான் ஆரம்பம் முதலே தடுமாற்றமாகவே விளையாடியது.
இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாத அந்த அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 46, சௌத் ஷாக்கீல் 62 ரன்கள் எடுத்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
முன்னதாக இந்தப் போட்டியின் முதல் ஓவரை இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர அனுபவ வீரர் முகமது ஷமி வீசினார். கடந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்து நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் ஆரம்பத்திலேயே அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே தடுமாற்றமாக பௌலிங் செய்த அவர் 5 ஒய்ட் பந்துகளை போட்டுத் தள்ளினார்.
அதன் காரணமாக அவர் மொத்தம் 11 பந்துகளை கொண்ட ஓவரை ஒரு வழியாக வீசி முடித்தார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 5 ஒயிட் பந்துகளைப் போட்ட முதல் இந்திய பவுலர் என்ற மோசமான பரிதாபமான சாதனையை ஷமி படைத்துள்ளார். இதற்கு முன் வேறு எந்த இந்திய பவுலர்களும் ஒரே ஓவரில் 5 வயது பந்துகளைப் போட்டதில்லை.
2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக ஜாகிர் கான் தலா 2 முறை ஒருவரில் 4 ஒயிட் போட்டுள்ளார். 2004ஆம் ஆண்டு தமிழக வீரர் லட்சுமிபதி பாலாஜி இலங்கைக்கு எதிராகவும் 2007, 2008ஆம் ஆண்டு ஆர்பி சிங் முறையே ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசத்துக்கு எதிராகவும் தலா 4 ஒய்ட் போட்டுள்ளார்கள். மேலும் 2012ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு எதிராக ஜகீர் கான் தலா 2 முறை ஒரே ஓவரில் 4 ஒய்ட் போட்டுள்ளார்.
இதையும் படிங்க: 241 ரன்ஸ்.. கையில் கிடைத்த அதிர்ஷ்டத்தை தவற விட்ட பாகிஸ்தான்?அடக்கிய இந்தியா.. வெற்றியை பெறுமா?
2012ஆம் ஆண்டு அதே இலங்கைத் தொடரில் இர்பான் பதான் ஒரு ஓவரில் 4 ஒய்ட் போட்டுள்ளார். அந்த வகையில் வரலாற்றில் 4 வெவ்வேறு இந்திய பவுலர்கள் 8 முறை ஒரு ஓவரில் 4 ஒய்ட் போட்டுள்ளார்கள். ஆனால் தற்போது முதல் முறையாக சமி 5 ஒய்ட் பந்துகளை போட்டு பரிதாப சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.