ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 2ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா தங்களுடைய 7 போட்டிகளிலும் 7 வெற்றிகளை பெற்று செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 358 ரன்களை இலக்காக நிர்ணயித்து பாதி வெற்றியை உறுதி செய்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 88, கில் 92, ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். ஆனால் அதைத் துரத்திய இலங்கை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.4 ஓவரில் 55 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்து இத்தொடரிலிருந்து வெளியேறியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 14 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சமி 5, சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.
மிரட்டிய ஷமி:
இந்த வெற்றிக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் அதன் பின் நியூசிலாந்துக்கு எதிராக 5, இங்கிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகள் எடுத்து தற்போது இப்போட்டியிலும் 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
அதிலும் குறிப்பாக இப்போட்டியில் வெறும் 5 ஓவரில் 1 மெய்டன் உட்பட 18 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை ஒரு போட்டியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் என்று ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். சொல்லப்போனால் ஸ்டார்க்கை விட 10 இன்னிங்ஸ் குறைவாக இந்த சாதனையை படைத்துள்ளது ஷமியின் தரத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம். அந்த பட்டியல்:
1. முகமது ஷமி : 7* (14 இன்னிங்ஸ்)
2. மிட்சேல் ஸ்டார்க் : 6 (24 இன்னிங்ஸ்)
3. இம்ரான் தாஹிர் : 5 (21 இன்னிங்ஸ்)
அதை விட இந்த போட்டியில் எடுத்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற ஜாம்பவான் ஜஹிர் கான் சாதனையையும் தகர்த்த ஷமி புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. முகமது ஷமி : 45* (14 இன்னிங்ஸ்)
2. ஜஹீர் கான் : 44 (23 இன்னிங்ஸ்)
3. ஜவஹல் ஸ்ரீநாத் : 44 (33 இன்னிங்ஸ்)
4. ஜஸ்பிரித் பும்ரா : 33* (16
5. அனில் கும்ப்ளே : 31 (18 இன்னிங்ஸ்)
இதையும் படிங்க: ரொம்ப ஏமாற்றமா இருக்கு.. அந்த 2 சான்ஸை மிஸ் பண்ணலைன்னா ஜெயிச்சுருப்போம்.. இலங்கை கேப்டன் சோகமான பேட்டி
இது மட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் 4 முறை ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சரித்திரமும் ஷமி படைத்துள்ளார். இதற்கு முன் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 3 முறை 5 விக்கெட் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.