
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வருகிறது. அதில் இதுவரை களமிறங்கிய முதல் 6 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக 6 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பையும் 90% உறுதி செய்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நிகராக சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் போட்டியிலேயே 2/3 என இந்தியா சரிந்த போது 85 ரன்களை அடித்த அவர் நியூசிலாந்துக்கு எதிராக அழுத்தமான சமயத்தில் 95 ரன்கள் அடித்து தன்னை சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்து வெற்றி பெற வைத்தார்.
வாழ்த்திய ரிஸ்வான்:
மேலும் வங்கதேசத்திற்கு எதிராக சதமடித்த அவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதங்கள் அடித்துள்ளார். அதனால் 49 சதங்களுடன் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை விரைவில் விராட் கோலி முறியடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. சொல்லப்போனால் இங்கிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் அதை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி டக் அவுட்டாகி மாற்றத்தை கொடுத்தார்.
இருப்பினும் அடுத்து நடைபெறும் வங்கதேச போட்டியில் 49வது சதமடித்து நவம்பர் 5ஆம் தேதி தம்முடைய பிறந்தநாளில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் தெனாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 50வது சதத்தை அடித்து விராட் கோலி உலக சாதனை படைப்பார் என்று சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் விராட் கோலி தம்முடைய பிறந்தநாளில் 49வது சதத்தை அடிப்பார் என்று நம்புவதாக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த உலகக்கோப்பை முடிவதற்குள் 50வது சதத்தையும் அடித்து உலக சாதனை படைக்க வாழ்த்துவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நவம்பர் 5ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் என்பதை அறிவது நன்றாக இருக்கிறது. அவருக்கு நான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாகவே நான் என்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதில்லை. ஏனெனில் அதை நான் நம்புவதில்லை”
இதையும் படிங்க: நெட் பிராக்டீஸ்ஸ ஸ்டார்ட் பண்ணிட்டாரு. ஆனாலும் இன்னும் லேட் ஆகுமாம் – ஹார்டிக் பாண்டியா குறித்து வெளியான தகவல்
“ஆனால் இம்முறை உங்களுக்கு பிறந்தநாள் சிறந்த நாளாக அமைய நான் வாழ்த்துகிறேன் விராட். குறிப்பாக அவர் தன்னுடைய பிறந்த நாளில் 49வது ஒருநாள் சதத்தை அடிப்பார் என்று நம்புகிறேன். மேலும் இந்த உலகக் கோப்பையில் அவர் 50வது சதத்தை அடிக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்” என கூறினார். முன்னதாக 50வது சதத்தை உலகக்கோப்பை ஃபைனலில் அடித்து விராட் கோலி இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுப்பார் என்று மைக்கேல் வாகன் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.