இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் 4 சுற்று ஆட்டம் இன்று இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்த ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளில் இவ்விரு அணிகளும் விளையாடிய போது மழை குறிக்கிட்டதன் காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே லீக் சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 266 ரன்கள் குவித்து இருந்தாலும் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள இந்த போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான முகமது ரிஸ்வான் அந்த அணியின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக இந்திய அணியின் டாப் ஆர்டர் நிச்சயம் கஷ்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை ஹாரிஸ் ரவுப் 9 விக்கெட்டுகளுடனும், ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருப்பதற்கு அவர்களின் விக்கெட் டேக்கிங் எபிலிட்டியே காரணம்.
இந்திய அணிக்கு எதிராக கூட ஷாஹீன் அப்ரிடி ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா, ஜடேஜா என 4 வீரர்களை சாய்த்து இருந்தார். அதேபோன்று ஹாரிஸ் ரவுப் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை சாய்த்தார். இந்நிலையில் இந்திய அணியின் பேட்டி ஆர்டர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தாக்கு பிடிக்காது என முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் தற்போது எங்கள் அணியை நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுமே மிகச்சிறப்பாக பந்துவீச கூடியவர்கள். அதோடு இந்திய அணியின் டாப் ஆர்டர் மட்டுமின்றி எந்த ஒரு அணியின் டாப் ஆர்டராக இருந்தாலும் சரி எங்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் கஷ்டப்படுவார்கள். எங்களுக்கு கிடைத்த கிப்ட்டே எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் தான்.
இதையும் படிங்க : தெ.ஆ அணியை சொந்த மண்ணில் புரட்டி எடுத்த ஆஸ்திரேலியா – பாகிஸ்தானின் பட்டத்தை பறித்து சாதனை
அதனால்தான் நாங்கள் இன்று ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை எட்டியுள்ளோம். எந்த ஒரு அணியுமே துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து விட்டால் அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வருவது கடினம் தான். ஆனாலும் கடைசி போட்டியில் இந்திய அணி 270 ரன்கள் வரை வந்தது. பாகிஸ்தான் அணியை போன்று இந்திய அணியிலும் நல்ல பவுலர்கள் உள்ளதால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என்று நினைப்பதாக ரிஸ்வான் கூறியது குறிப்பிடத்தக்கது.