நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்பதை நிரூப்பிக்கும் முஹமது ரிஸ்வான் – சூரியகுமாரை முந்தி புதிய சாதனை

Suryakumar YAdav Mohammed Rizwan
- Advertisement -

அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் இறுதி கட்டமாக தயாராகி வருகிறது. அந்த வரிசையில் பக்கத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் முத்தரப்பு தொடரில் மோதின. அதில் லீக் சுற்றில் 1 வெற்றியை கூட பதிவு செய்யாமல் வங்கதேசம் வெளியேறிய நிலையில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய மாபெரும் இறுதி போட்டி அக்டோபர் 14ஆம் தேதியன்று கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 163/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டேவோன் கான்வே 14, ஃபின் ஆலன் 12, கிளன் ப்லிப்ஸ் 29, மார்க் சாப்மேன் 25, ஜிம்மி நீசம் 17 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 59 (38) ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 164 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 15, ஷான் மஹ்சூட் 14 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

- Advertisement -

நம்பர் ஒன் ரிஸ்வான்:
அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் போராடிய மற்றொரு தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 4 பவுண்டரியுடன் 34 (29) ரன்களில் அவுட்டானார். அதனால் 74/3 என தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் ஆசிப் அலி 1 ரன்னில் அவுட்டானாலும் அடுத்ததாக களமிறங்கி அற்புதமாக பேட்டிங் செய்த ஹைதர் அலி 3 பவுண்டரி 2 சிக்சருடன் 31 (15) ரன்களும் இப்திகர் அஹமத் 25* (14) ரன்களும் முகமது நவாஸ் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 38* (22) ரன்களும் குவித்து அபார பினிஷிங் கொடுத்தனர்.

அதனால் 19.3 ஓவரிலேயே 168/5 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து இந்த முத்தரப்பு தொடரின் கோப்பையை வென்றது. சமீப காலங்களில் தடுமாறிய அந்த அணியின் மிடில் ஆர்டர் இப்போட்டியில் வென்று உலகக் கோப்பைக்கு முன்பாக பார்முக்கு திரும்பியுள்ளது அந்நாட்டவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் 34 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 2022 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற இந்தியாவின் சூரியகுமார் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்து தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

- Advertisement -

அதிலும் சூரியகுமார் யாதவ் 23 இன்னிங்சில் 801 ரன்கள் குவித்திருக்கும் நிலையில் இவர் 18 இன்னிங்ஸ்சிலேயே 821* ரன்கள் குவித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே சக்கை போடு போட்டு வரும் இவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் (1326, 2021இல்) என்ற ஆல்-டைம் வரலாற்றுச் சாதனையை கடந்த வருடம் படைத்தார். அதனாலேயே 2021ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதை வென்ற அவர் சமீபத்திய ஆசிய கோப்பையில் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறினார்.

மேலும் சமீபத்திய ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் (281) அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் (316) இந்த முத்தரப்பு தொடரில் அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர் (301) போன்ற சாதனைகளுடன் அவர் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்தியாவை முதன்முறையாக தோற்கடிக்க இவரது ஆட்டம் துருப்புச் சீட்டாக இருந்தது.

இதையும் படிங்க: ஆசிய கோப்பை 2022 : டி20’யில் டெஸ்ட் பீல்டிங், வரலாற்று சாதனை படைத்த தீப்தி சர்மா – பைனலில் சாதிக்குமா இந்தியா

இருப்பினும் டாப் ஆர்டரில் விளையாடும் இவர் 54.73 என்ற சிறப்பான சராசரியில் ரன்களை எடுத்தாலும் 126.30 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார். ஆனால் மறுபுறம் 30 வயதில் தாமதமாக அறிமுகமாகி கடந்த ஒன்றரை வருடங்களில் எதிரணிகளை பந்தாடி இவருக்கு போட்டியாக வந்துள்ள சூரியகுமார் பெரும்பாலும் மிடில் ஆர்டரில் களமிறங்கினாலும் 40.05 என்ற சிறப்பான சராசரியிலும் 184.56 என்ற உலகிலேயே அதிகபட்ச நெருப்பான ஸ்ட்ரைக் ரேட்டிலும் வெளுத்து வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement