ஆசிய கோப்பை 2022 : டி20’யில் டெஸ்ட் பீல்டிங், வரலாற்று சாதனை படைத்த தீப்தி சர்மா – பைனலில் சாதிக்குமா இந்தியா

- Advertisement -

ஆசிய கண்டத்தின் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் 15வது ஆசிய கோப்பை சமீபத்தில் துபாயில் நடைபெற்று முடிந்த நிலையில் மகளிர் ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று துவங்கின. அதில் ஏற்கனவே 6 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்திய மகளிரணி பங்கேற்ற 6 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 1 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதே போல் பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகளும் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் சொந்த மண்ணில் களமிறங்கிய வங்கதேசம் 6 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளை பதிவு செய்து கோப்பையை தக்க வைக்க முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. அந்த நிலையில் அக்டோபர் 13ஆம் தேதியன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றின் 2வது போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 148/6 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

பைனலில் இந்தியா:
இந்திய அணிக்கு நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 13 (14) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் 27 (26) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 5 பவுண்டரி 1 சிக்சருடன் 42 (28) ரன்களிலும் மிடில் ஆர்டரில் பொறுப்பை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4 பவுண்டரியுடன் 36 (30) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் பூஜா வஸ்திரக்கர் 17* (13) ரன்கள் எடுக்க தாய்லாந்து சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக திப்போச் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 149 ரன்களை துரத்திய தாய்லாந்து அணியினர் ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்து வீச்சில் அதிரடியாக ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அதிகபட்சமாக கேப்டன் சாய்வாய் 21 (14) ரன்களும் பூச்சட்தம் 21 (29) ரன்கள் எடுத்த போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 74/9 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி பரிதாபமாக தோற்றது. அந்தளவுக்கு அற்புதமாக பந்து வீசிய இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் ராஜேஸ்வரி கைக்வாட் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

- Advertisement -

அதனால் 74 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த இந்தியா அக்டோபர் 15ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் மற்றொரு அரை இறுதியில் பாகிஸ்தானை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து தகுதி பெற்றுள்ள இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த வெற்றிக்கு 42 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து முக்கிய பங்காற்றிய ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருதை வென்றார். முன்னதாக அந்தப் போட்டியில் 19வது ஓவரை வீசிய இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி கைக்வாத் தாய்லாந்து கேப்டன் சாய்வாயை 4வது பந்தில் அவுட்டாக்கி அடுத்து களமிறங்கிய பனிட்டா மாயாவை கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

அதனால் ஹாட்ரிக் டிக்கெட் எடுக்கும் வாய்ப்பை உருவாக்கிய அவருக்கு உதவும் வகையில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீட் கவூர் 6 வீராங்கனைகளை பிட்ச்சுக்கு அருகே நிறுத்தி கேட்ச்களை பிடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்து கொடுத்தார். ஆனாலும் அடுத்து களமிறங்கிய கம்சோம்ப்பு விக்கெட் விடாமல் ஹாட்ரிக் எடுப்பதை தடுத்து நிறுத்தினார். இருப்பினும் தனது அணி வீராங்கனை ஹாட்ரிக் எடுப்பதற்காக மகளிர் டி20 கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட் போல ஃபீல்டிங்கை செட்டிங் செய்த கேப்டன் ஹர்மன்பிரீத் கௌரின் ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் இந்திய ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது.

அதை விட இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்து அற்புதமாக பந்து வீசிய மற்றொரு இந்திய வீராங்கனை தீப்தி சர்மா இந்த வருட ஆசிய கோப்பையில் இது வரை பங்கேற்ற 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார்.

அத்துடன் அதன் வாயிலாக மகளிர் ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீராங்கனை என்ற பாகிஸ்தானின் சனா மிர் சாதனையை உடைத்த அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. தீப்தி சர்மா (இந்தியா) : 13* (2022)
2. சனா மிர் (பாகிஸ்தான்) : 12 (2016)
3. நிதா தார் (பாகிஸ்தான்) : 11 (2018)

Advertisement