இலங்கை பவுலர்களை வெறித்தனமாக அடித்து போராடிய முகமது நபி – ஒருநாள் கிரிக்கெட்டில் சரித்திர சாதனை (வீடியோ இணைப்பு)

Mohammed Nabi
Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 5ஆம் தேதி பாகிஸ்தானில் இருக்கும் கடாஃபி நகரில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் இலங்கை சூப்பர் 4 சுற்றுக்கு கடைசி அணியாக தகுதி பெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்டு 50 ஓவர்களில் போராடி 291/8 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 92, பதும் நிசாங்கா 41, சரித் அஸலங்கா 36 என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக குலாம் நைப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 37.1 ஓவரில் 292 ரன்களை எடுத்தால் ரன் ரேட் அடிப்படையில் இலங்கையை பின்னுக்கு தள்ளி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற இக்கட்டான சூழ்நிலையில் சேசிங்கை துவக்கிய ரஹ்மத்துல்லா குர்பாஸ் 4, இப்ராஹீம் ஜாட்ரான் 7 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

வெறித்தனமான போராட்டம்:
இருப்பினும் அடுத்ததாக வந்த குலாம் நைப் 22 ரன்களும் ரஹீல் ஷா 45 ரன்களும் எடுத்து போராடி அவுட்டானார்கள். அந்த சமயத்தில் எதிர்புறம் நிதானமாக விளையாடிய கேப்டன் ஷாகிதியுடன் அடுத்ததாக வந்து ஜோடி சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் முகமது நபி முதல் பந்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை கையிலெடுத்து இலங்கை பவுலர்களை அடித்து நொறுக்கினார்.

குறிப்பாக 18.4 ஓவரில் 121/4 என்ற நிலையில் இருந்த ஆப்கானிஸ்தான் அடுத்த 8 ஓவரில் 82 ரன்கள் குவிக்கும் அளவுக்கு பட்டைய கிளப்பிய பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 65 (32) ரன்களை 203.13 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி போட்டியில் பெரிய திருப்பு முனையை உண்டாக்கி ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த ஜானத் அதிரடியாக 22 (13) ரன்கள் எடுத்து போராடி அவுட்டாக மறுபுறம் சற்று தடுமாறிய கேப்டன் ஷாகிதி 59 (66) ரன்களில் அவுட்டாகி பின்னடவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

ஆனாலும் கடைசி நேரத்தில் இப்ராஹிம் ஜாட்ரான் அதிரடியாக 23 (15) ரன்களும் ரசித் கான் 27* (16) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் 37வது ஓவரின் முதல் பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது முஜீப் உர் ரஹ்மான் டக் அவுட்டாக அடுத்து வந்த பரூக்கியும் டக் அவுட்டாகி சென்றார். அதன் காரணமாக 38.4 ஓவரில் 289 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து ஆப்கானிஸ்தான் இத்தொடரிலிருந்து வெளியேறியது.

ஆனாலும் அந்த அணிக்கு முழு மூச்சுடன் போராடி 24 பந்துகளில் 50 ரன்களை கடந்து ரசிகர்களின் மனதை வென்ற முகமது நபி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற புதிய சரித்திர சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த வாரம் இதே இலங்கை மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முஜீப் உர் ரகுமான் 26 பந்துகளில் அரை சதமடித்ததே முந்தைய சாதனையாகும். மறுபுறம் பந்து வீச்சில் அசத்திய இலங்கை சார்பில் அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

Advertisement