
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. இம்முறை 20 ஓவர் ஃபார்மட்டில் நடைபெறும் அத்தொடரில் இந்தியா கோப்பையை வெல்லத் தயாராகி வருகிறது. சொல்லப்போனால் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலிக்கும் இந்தியா ஏற்கனவே 8 ஆசியக் கோப்பைகளை வென்றுள்ளது.
எனவே இம்முறையும் ஆசியக் கோப்பையை வென்று இந்திய அணி சாதிக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். முன்னதாக ஆசியக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் கழற்றி விடப்பட்டனர். குறிப்பாக சுப்மன் கில்லை வருங்கால கேப்டனாக வளர்ப்பதற்காக அவர்கள் கழற்றி விடப்பட்டதை ஏராளமான முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் வென்ற இந்திய அணியின் வெற்றி கூட்டணியை கௌதம் கம்பீர் தவற விட்டுள்ளதாக முன்னாள் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். அதாவது அக்சர் படேல், ஜடேஜா, பாண்டியா ஆகிய 3 தரமான ஆல் ரவுண்டர்களை வைத்து ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணி 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதாக ஃகைப் தெரிவித்துள்ளார்.
எனவே தற்போதைய அணியில் ஓய்வு பெற்ற ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் அவரை தவற விட்டுள்ள இந்திய அணி புதிய வெற்றிக் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்றும் ஃகைப் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
“அக்சர், ஜடேஜா, பாண்டியா – ஆகிய 3 ஆல் ரவுண்டர்களை வைத்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. அந்தக் கூட்டணியை வைத்து விளையாடும் போது உங்களுக்கு 6 முறையான பவுலிங் ஆப்ஷன்கள் கிடைக்கும். 8வது இடம் வரை பேட்டிங்கில் ஆழம் கிடைக்கும். ஆனால் இந்த ஆசியக் கோப்பையில் பாண்டியா – அக்சர் ஆகிய 2 முறையான ஆல் ரவுண்டர்கள் மட்டுமே உள்ளனர்”
இதையும் படிங்க: கேப்டனான அப்றம் அதுல தடுமாறும் சூரியகுமார் அசத்தலன்னா.. சுப்மன் கில் கேப்டனாகிடுவாரு.. எச்சரித்த ஜாபர்
“எனவே இந்தியா புதிய வின்னிங் காம்பினேஷனை கண்டறிய வேண்டும். இங்கே தான் வாஷிங்டன் சுந்தரை தவற விட்டுள்ளார்கள்” என்று கூறினார். கடந்த 2024 இலங்கை டி20 தொடரில் ரிங்கு, சூரியகுமார், அபிஷேக் ஆகிய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களாக அசத்தினார்கள். அவர்களை நம்பியே ஆசியக் கோப்பையில் கௌதம் கம்பீர் 3 ஆல் ரவுண்டர்களை தேர்ந்தெடுக்காதது குறிப்பிடத்தக்கது.