
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை டிரேடிங் முறையில் ராஜஸ்தான் அணிக்காக கொடுத்துள்ளது. அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை 18 கோடி என்ற பெரிய தொகைக்கு சிஎஸ்கே அணி வாங்கியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
அதனால் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியையும் தலைமைத் தாங்குவார் என்ற பேச்சுக்கள் காணப்பட்டது. ஆனால் ஏற்கனவே தோனியின் ஆசியைப் பெற்ற ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரில் பெயருக்காக மட்டுமே ருதுராஜ் கேப்டனாக செயல்படுவார் என்று முன்னாள் வீரர் முகமது ஃகைப் தெரிவித்துள்ளார்.
மற்ற படி இம்முறையும் எம்எஸ் தோனி இம்பேக்ட் பிளேயராக அல்லாமல் முழுமையாக 20 ஓவர்கள் விளையாடி சிஎஸ்கே அணியை தலைமைத் தாங்குவார் என்றும் அவர் கூறியுள்ளார். அதே சமயம் பேட்டிங் வரிசையில் தோனி மேலே களமிறங்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஃகைப் பேசியது பின்வருமாறு.
“தோனி அதிகம் பேட்டிங் செய்யப் போவதில்லை. அவர் 20 ஓவர்கள் விளையாடி கேப்டனாக செயல்படுவார். அனைத்து வீரர்களுடன் சேர்த்து அவர் ருதுராஜையும் வழி நடத்துவார். அதற்காக மட்டுமே தோனி இன்னும் விளையாடுகிறார். அவர் சிஎஸ்கே அணியின் ஆலோசகர் மற்றும் கேப்டன். அணியின் தாளில் வேண்டுமானால் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருக்கலாம்”
“ஆனால் தோனி களத்திற்கு சென்று விளையாடும் வரை சிஎஸ்கே அணியில் அனைத்தும் அவருடைய கையில் தான் இருக்கும். அவர் செய்வதில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. எனவே இம்முறை தோனி இம்பேக்ட் வீரராக விளையாடுவார் என்று நான் கருதவில்லை. ஒன்று அவர் தன்னைத்தானே அணியிலிருந்து வெளியே வைத்துக் கொள்வார்”
இதையும் படிங்க: 9 முறை டக்.. ஜிம்பாப்வே அணியிடம் அப்ரிடியை முந்தி பாபர் அசாம் மோசமான சாதனை.. பாகிஸ்தான் வெற்றி
“இல்லையென்றால் முழுமையாக விளையாடுவார். அதை விட்டுவிட்டு அவர் இம்பேக்ட் வீரராக விளையாடுவதற்கான வாய்ப்பில்லை” என்று கூறினார். மொத்தத்தில் தற்போது சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சிஎஸ்கே அணிக்காக விளையாடத் தயாராக இருக்கிறார். அதன் காரணமாக இந்த வருடத்துடன் தோனி ஏற்கனவே சொன்னது போல தம்முடைய கடைசிப் போட்டியை சென்னை மண்ணில் விளையாடி ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதற்கு பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.