ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது. முன்னதாக அந்த அணிக்கு 2018 – 2024 வரை ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார். அந்த காலகட்டங்களில் ஒரு சீசனில் மட்டுமே டெல்லி ஃபைனலுக்கு சென்றது.
ஆனால் அவருடைய வழி காட்டுதலில் டெல்லி கோப்பையை வெல்லவில்லை. அதனால் இந்த வருடம் அவரை டெல்லி அணி நிர்வாகம் கழற்றி விட்டது. இந்நிலையில் அஸ்வின், ரகானே போன்ற இந்திய வீரர்களை ரிக்கி பாண்டிங் கழற்றி விட்டதாக டெல்லி அணியின் முன்னாள் துணைப் பயிற்சியாளர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். அதற்கு டெல்லி அணியின் இயக்குனராக இருந்த சௌரவ் கங்குலி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கைஃப் கூறியுள்ளார்.
வெளியேறிய காரணம்:
அதனாலேயே டெல்லி நிர்வாகம் அவரை கழற்றி விட்டதாகவும் கைஃப் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “டெல்லி அணியை இன்னும் சிறப்பாக வழி நடத்தியிருக்க முடியும் என்று ரிக்கி பாண்டிங் தமக்குத் தாமே ஒப்புக் கொண்டிருப்பார். ஏனெனில் அவரும் கங்குலியும் நானும் நல்ல அணியை உருவாக்கினோம். ஆனால் நான் யாரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கும் நேரங்கள் இருந்ததாக நீங்கள் நம்ப மாட்டீர்கள்”
“ரஹானே, அஸ்வின், இஷாந்த் சர்மா, ஹெட்மயர் ஆகியோருக்கு கூட இடம் கிடைக்கவில்லை. பின்னர் ஏலத்திற்கு சென்ற போது கங்குலி தான் முடிவுகளை எடுத்தார். அதற்காக அவரை பாராட்ட வேண்டும். இந்திய வீரர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அவர் சொன்னார். அதற்காக சிகர் தவானுடன் அவர் பேசினார். அதன் பின் ஹைதராபாத் அணியுடன் டிரேடிங் முறையில் வர்த்தகம் நடந்தது”
கங்குலியின் முடிவுகள்:
“ஆனால் பாண்டிங் அதை ஏற்கவில்லை. இந்திய டெஸ்ட் அணியில் தவான் நீக்கப்பட்டிருந்ததால் அவருடைய கேரியர் முடிந்ததாக பாண்டிங் கருதினார். அதனால் அவரை வாங்க பாண்டிங் விரும்பவில்லை. ஆனால் ஹைதராபாத் அணியில் இருந்த டேவிட் வார்னரை வாங்குவதற்கு அவர் விரும்பினார். தவான் இனிமேலும் சிறந்த வீரர் இல்லை என்று பாண்டிங் கருதினார்”
இதையும் படிங்க: விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்.. ரோஹித் சர்மாவை முந்தவும் வாய்ப்பு – விவரம் இதோ
“இருப்பினும் கங்குலி மற்றும் டெல்லியின் உரிமையாளர் பர்த் ஜிண்டால் ஆகியோர் தவானுக்கு ஆதரவு கொடுத்து வாங்கினார்கள். கடைசியில் தவான் எங்களுடைய முடிவை சரி என்பதை 500 ரன்கள் அடித்து நிரூபித்தார். அதே போல அஸ்வினை டெல்லி அணிக்குள் கொண்டு வந்ததற்கும் கங்குலியை பாராட்ட வேண்டும். தற்போது சச்சினுக்கு நிகரான பெயருடைய பாண்டிங் வெற்றிக்கான திட்டங்களை வைத்திருப்பதாக அணி உரிமையாளர்கள் கருதவில்லை. அதனாலேயே அவரை அவர்கள் நன்றியுடன் வழி அனுப்பி வைத்திருக்கலாம்” என்று கூறினார்



