விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்.. ரோஹித் சர்மாவை முந்தவும் வாய்ப்பு – விவரம் இதோ

Babar-Azam
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடியிருந்த பாகிஸ்தான் அணி இரண்டு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது.

விராட் கோலியை முந்திய பாபர் அசாம் :

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 ஆவது டி20 போட்டியானது நேற்று ஹோபர்ட் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 11.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 118 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான பாபர் அசாம் 28 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரியுடன் 41 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரரான விராட் கோலியை கடந்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரராக அவர் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மட்டும் இதுவரை 119 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பாபர் அசாம் 4192 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி 117 இன்னிங்ஸ்களில் விளையாடி 4188 ரன்கள் குவித்து தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : எனக்கே ஆச்சர்யமா இருக்கு.. ஜஸ்ப்ரித் பும்ராவும் நானும் ஒன்னா இருக்கோம்.. சம்சி வியப்பான பதிவு

இந்த பட்டியலில் அதிக ரன்கள் குவித்த வீரராக ரோகித் சர்மா 151 இன்னிங்ஸ்களில் 4231 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டதால் விரைவில் இந்த பட்டியலில் பாபர் அசாம் முதலிடத்தினை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement