இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா மிகச்சிறந்த பவுலராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் அவர் இந்திய பவுலிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படுகிறார். தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சன் வைத்து எதிரணிகளை திணறடிக்கும் அவர் இந்தியாவின் மேட்ச் வின்னராக நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் அவர் 15 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அந்த வகையில் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் தொடர்நாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் தம்முடைய புள்ளிவிவரங்கள் ஒரே மாதிரியாக இருப்பதாக தென் ஆப்பிரிக்க வீரர் தப்ரைஸ் சம்சி ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்.
ஒரே மாதிரி:
இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “வேடிக்கையான உண்மை. ஜஸ்ப்ரித் பும்ராவும் நானும் மிகச்சரியாக ஒரே அளவிலான சர்வதேச டி20 போட்டிகளை விளையாடி உள்ளோம். அந்தப் போட்டிகளில் நாங்கள் இருவரும் சம அளவிலான பந்துகளை வீசியுள்ளோம். மேலும் இருவரும் ஒரே அளவிலான விக்கெட்டுகளை எடுத்துள்ளோம். என்ன ஒரு அற்புதமான ஒற்றுமை” என்று பதிவிட்டுள்ளார்.
அவர் கூறுவது போல சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பும்ரா இதுவரை 70 போட்டியில் விளையாடியுள்ளார். அதில் 1509 பந்துகளை வீசியுள்ள அவர் 89 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மறுபுறம் தென்னாபிரிக்க அணிக்காக விளையாடி வரும் சம்சியும் இதுவரை 70 போட்டிகளில் விளையாடி 1509 பந்துகளை வீசியுள்ளார். அதில் பும்ராவை போலவே அவரும் 89 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
அசத்துவாரா பும்ரா:
அந்த வகையில் தாமும் பும்ராவும் இதுவரை விளையாடிய போட்டிகளில் ஒரே மாதிரியாக செயல்பட்டுள்ளது ஆச்சர்யத்தை கொடுப்பதாக சம்சி பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் அடுத்ததாக பும்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். அந்த தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: மிட்சேல் ஸ்டார்க்கின் 24.75 கோடி சாதனையை.. நம்ம இந்திய வீரர் உடைக்க போறாரு.. இர்பான் பதான்
எனவே அவருக்கு பதிலாக முதல் போட்டியில் பும்ரா இந்திய அணியை கேப்டனாக வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. அதனால் பும்ரா ஆஸ்திரேலியாவில் மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டிய நிலையில் உள்ளார்.



