ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி துவங்குகிறது. பாகிஸ்தானில் துவங்கும் அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. இந்நிலையில் 29 வருடங்கள் கழித்து தங்களது சொந்த நாட்டில் நடைபெறும் இந்த ஐசிசி தொடரில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் கோப்பையை தக்க வைக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பாகிஸ்தான் அணி ஸ்பின்னர்களை எதிர்கொள்ள தடுமாறுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். மறுபுறம் சமநிலைக் கொண்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இத்தொடரில் பாகிஸ்தானுக்கு சவாலை கொடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே சொந்த மண்ணில் பாகிஸ்தான் கோப்பையை தக்க வைக்க வேண்டுமெனில் சூழ்நிலையை கணக்கிட்டு விளையாடுவது அவசியம் என்றும் யூசுப் கூறியுள்ளார்.
யூசுப் அறிவுரை:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு பாகிஸ்தானியர் போல நானும் இந்தத் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். 29 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் ஒரு ஐசிசி தொடரை நடத்துகிறது. அதற்காக மைதானத்தை 6 மாதத்தில் புதுப்பித்ததற்காக பாகிஸ்தான் வாரியத்திற்கு பாராட்டுக்கள். ஒருவேளை பாகிஸ்தான் ஃபைனலுக்கு சென்றால் தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடுவார்கள்”
“பாகிஸ்தான் வாரியம் தங்களது மைதானத்தை சிறப்பாக உருவாக்கியது போல் நம் அணியும் நன்றாக விளையாடும் என்று நம்புகிறேன். நியூசிலாந்து இந்த தொடரில் மிகவும் பேலன்ஸ் நிறைந்த அணியாக தெரிகிறது. துணை கண்டத்திற்கு தகுந்தாற்போல் அவர்களிடம் நல்ல அணி இருக்கிறது. 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் நல்ல ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்”
சுழலில் விழும் பாகிஸ்தான்:
“இந்தியாவின் பேலன்ஸ் நிறைந்த அணியாகும். இருப்பினும் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடுவதால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அதற்கு தொடர் முழுவதும் பாகிஸ்தான் தங்களது கிரிக்கெட்டை கணக்கிட்டு விளையாட வேண்டும். சமீபத்தில் நாம் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாடினோம்”
இதையும் படிங்க: இந்தியா – பாக் வீரர்கள் நண்பர்கள் தான்.. தோனி போட்டோவுடன் அட்வைஸ் கொடுத்தாரு.. சர்பராஸ் பேட்டி
“இருப்பினும் ஸ்பின்னர்களுக்கு எதிராக நாம் நன்றாக விளையாடி குறைந்த டாட் பந்துகளை எதிர்கொண்டு ஸ்டிரைக்கை மாற்ற வேண்டும். ஏனெனில் நாம் நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடரில் ஸ்பின்னர்களிடம் சிறப்பாக விளையாடாமல் அம்பலப்பட்டோம்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.



