- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஷமிக்கு அநியாயம் பண்ணிட்டீங்க.. சர்வதேச வீரர்கள் செய்யாததை செஞ்சும் அவமானப் படுத்திட்டீங்க.. கோச் விளாசல்

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜனவரி 11 முதல் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முகமது ஷமி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாதது பல ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் லேசான காயத்துடன் நெருப்பாக பந்து வீசிய அவர் இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார்.

அதன் பின் காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரால் கடந்த 2024/25 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரை விளையாட முடியவில்லை. இறுதியாக குணமடைந்த ஷமி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் களமிறங்கி அதிக விக்கெட்டுகள் எடுத்து இந்தியா வெற்றி பெற தன்னுடைய பங்காற்றினார். ஆனால் அப்போதிலிருந்து இதுவரை இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

- Advertisement -

கடினமான உழைப்பு:

அது பற்றி கேட்டதற்கு முகமது ஷமி ஃபிட்டாக இல்லையென்று தேர்வுக்குழு அஜித் அகர்கர் பதிலளித்தார். அந்த நிலையில் ரஞ்சிக் கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, சயீத் முஸ்டாக் அலி கோப்பை ஆகிய 3 வகையான உள்ளூர் தொடர்களிலும் பெங்கால் அணிக்காக விளையாடிய அவர் நிறைய விக்கெட்டுகள் எடுத்து தன்னுடைய ஃபார்ம், ஃபிட்னெஸை நிரூபித்தார். இருப்பினும் அவருக்கு இதுவரை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மொத்தத்தில் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணாவை தேர்ந்தெடுத்துள்ள தேர்வுக்குழு ஷமியின் கேரியரை முடிக்க முயற்சித்து வருகிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் சமீப காலங்களில் ஷமியைப் போல எந்த நட்சத்திர சர்வதேச வீரர்களும் 3 விதமான உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்று அவருடைய பயிற்சியாளர் லக்ஷ்மி ரட்டன் சுக்லா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அவமானப்படுத்திய தேர்வுக்குழு:

இருப்பினும் தொடர்ந்து ஷமியை புறக்கணிக்கும் தேர்வுக்குழு அநியாயம் செய்வதாக விமர்சிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒரு வீரரால் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? எவ்வளவு விக்கெட்டுகளை எடுக்க முடியும்? இதற்கான அர்த்தம் அவர்களை ஷமி இந்திய ஒருநாள் அணியில் விளையாடுவதை விரும்பாதது போல் தெரிகிறது”

இதையும் படிங்க: 300 ரன்ஸ்.. கேப்டனாக உலக சாதனை படைத்த சூர்யவன்சி.. தெ.ஆ அணியை வீழ்த்திய இளம் இந்தியா

“ஆனால் ஷமியிடம் கொடுக்க இன்னும் நிறைய இருக்கிறது. தேர்வுக்குழு அவருக்கு அநியாயம் செய்துள்ளது. சமீப காலங்களில் ஷமி அளவுக்கு எந்த சர்வதேச வீரரும் உள்ளூர் கிரிக்கெட்டில் இவ்வளவு அர்ப்பணிப்புடன் விளையாடியதில்லை. ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் அவ்வளவு கடினமாக உழைத்துப் போராடிய அவருக்கு தேர்வுக்குழு செய்துள்ளது அவமானமான விஷயமாகும்” என்று கூறினார்.

- Advertisement -