இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பல்லகேல் நகரில் பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிசாங்கா 210* ரன்கள் குவித்த உதவியுடன் 382 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் இலங்கை வீரராக நிசாங்கா சாதனை படைத்தார். பின்னர் 382 ரன்கள் இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 55/5 என தடுமாறியதால் கண்டிப்பாக 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த முகமது நபி மற்றும் ஓமர்சாய் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.
சாதித்த நபி:
குறிப்பாக 6வது விக்கெட்டுக்கு 242 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் போட்டு முடிந்தளவுக்கு போராடிய அந்த ஜோடியில் முகமது நபி சதமடித்து 136, ஓமர்சாய் 149* ரன்கள் எடுத்தும் ஆப்கானிஸ்தான் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய ஆல் ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் 1 விக்கெட் மற்றும் 136 ரன்கள் எடுத்து அசத்திய முகமது நபி உலகின் புதிய நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக முன்னேறி அசத்தியுள்ளார்.
குறிப்பாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் சாகிப் அல் ஹசன் கடந்த 2019 மே 7ஆம் தேதி ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரசித் கானை முந்தி உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். அப்போதிலிருந்து கடந்த 1739 நாட்களாக தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக திகழ்ந்த அவர் 2023 உலகக் கோப்பை உட்பட சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டார்.
மறுபுறம் முகமது நபி சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் கூடுதல் புள்ளிகளை பெற்று ஷாகிப்பை முந்தி நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். சொல்லப்போனால் இதன் வாயிலாக ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மிகவும் அதிக வயதில் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் இடத்தை பிடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையையும் முகமது நபி படைத்துள்ளார்.
இதையும் படிங்க: நான் உங்க மனைவியை லவ் பண்றேன்.. காதலர் தினத்தில் சேட்டையான இந்திய ரசிகருக்கு.. பட் கமின்ஸ் பதிலடி
தற்போது 39 வருடம் 1 மாதம் வயதில் முகமது நபி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை வீரர் திலகரத்னே தில்சான் 38 வருடம் 8 மாதம் வயதில் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் இடத்தைப் பிடித்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் சாதிக்க வயது தடையில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக முகமது நபி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.