
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியின் போது பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடியிருந்தார். ஆனால் ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது அவர் விளையாடவில்லை. அப்படி இரண்டாவது போட்டியில் அவர் விளையாடாததற்கு காரணம் : அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக டாசின் போதே சூர்யகுமார் யாதவ் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தான் தற்போது சில விமர்சகர்கள் மத்தியில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் முதல் டி20 போட்டியில் விளையாடிய ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு இரண்டாவது போட்டியிலேயே ஓய்வு வழங்க காரணம் என்ன? என்ற கேள்வியை எழுப்பி தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடிவிட்டு இரண்டாவது போட்டியிலேயே அவருக்கு ஓய்வு கொடுப்பது என்பது அர்த்தமற்ற ஒன்று. ஏனெனில் பும்ராவின் பணிச்சுமையை பிசிசிஐ நிர்வாகித்து வந்தாலும் போதுமான போட்டிகளில் அவரை தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும்.
ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் அவர் இடம் பெறவில்லை. அதனால் முழு ஓய்வில் தான் அவர் இருந்து வந்தார். இவ்வேளையில் டி20 தொடரில் தொடர்ச்சியாக அவர் மூன்று ஆட்டங்களிலாவது விளையாடியிருக்க வேண்டும்.
இதையும் படிங்க : இன்றைய 3 ஆவது போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ
ஆனால் முதல் போட்டியில் விளையாடிவிட்டு இரண்டாவது போட்டியிலேயே அவருக்கு ஓய்வு எதற்கு? இவ்வளவு நாள் ஓய்வில் இருந்து தான் அவர் டி20 அணிக்குள் வந்திருக்கிறார். இப்போதும் நீங்கள் ஓய்வு வழங்கினால் அது தேவையில்லாத ஒன்று அவருக்கு போதுமான போட்டிகளை விளையாட வழங்க வேண்டும் என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.