2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக துவங்க இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு துபாய் நாட்டிற்கும் சென்றடைந்து விட்டது. இந்த அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், நட்சத்திர வீரருமான சஞ்சு சாம்சனும் இடம் பிடித்துள்ளார். ஆனால் இந்த ஆசிய கோப்பை தொடரில் அவர் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைக்காது என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.
சஞ்சு சாம்சனை 3 ஆம் இடத்தில் விளையாட வையுங்க : முகமது கைப்
ஏனெனில் இந்திய டி20 அணிக்குள் துணை கேப்டனாக சுப்மன் கில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளதால் அவரே அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் துவக்க வீரருக்கான இடத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளார். அதோடு பிளேயிங் லெவனில் இடத்தினை இழக்கவும் வாய்ப்புள்ளதாக பலராலும் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் அனுபவம் வாய்ந்த வீரரான சஞ்சு சாம்சன் சிக்ஸ் அடிப்பதிலும் அசாத்திய திறமையை கொண்டவர் என்பதனால் அவரை மூன்றாவது இடத்தில் களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது :
என்னை பொருத்தவரை அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவர் தான் ஆசிய கோப்பை தொடருக்கான துவக்க வீரர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் திலக் வர்மா தற்போது இளம் வீரராக இருக்கிறார். எனவே அவர் வாய்ப்புக்காக காத்திருக்கலாம். அதில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. ஆனால் அந்த இடத்தில் அனுபவம் வாய்ந்த வீரரான சஞ்சு சாம்சனை களமிறக்க வேண்டும்.
மூன்றாவது இடத்தில் சஞ்சு சாம்சன் களமிறங்கினால் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்குள் அந்த இடத்தினை நிலைப்படுத்திக் கொள்வார். ஐபிஎல் தொடரில் முதல் 10 சிக்ஸ் ஹிட்டர்களில் ஒருவரான சஞ்சு சாம்சன் வெகு எளிதாக பந்துவீச்சாளர்களை அடித்து விளையாடக்கூடியவர். ரஷீத் கான் போன்ற ஒரு பவுலரையே மிடில் ஓவரில் சிக்ஸ் அடிக்கும் திறமை கொண்ட அவருக்கு மூன்றாவது இடத்தில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இதையும் படிங்க : தங்க மன ப்ரீத்தி மேடம்.. 2017இல் கெய்ல், ஏபிடி, கோலியை சாய்த்த எனக்கு அவரோட விருதை கொடுத்தாங்க.. சந்தீப்
வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி, சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி மிகச் சிறப்பாக விளையாடும் திறமை அவரிடம் இருக்கிறது. எனவே அவருக்கு மூன்றாவது இடத்தை வழங்கி விளையாட வைக்க வேண்டும் என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.



