
இந்திய கிரிக்கெட் அணி ராஞ்சியில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 349 ரன்களை குவித்து பின்னர் தென்னாப்பிரிக்காவை 332 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் அதிகபட்சமாக விராட் கோலி 135, ரோஹித் சர்மா 57, கேப்டன் ராகுல் 60 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினர்.
பவுலிங் துறையில் குல்தீப் யாதவ் 4, ஹர்ஷித் ராணா 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். முன்னதாக இத்தொடரில் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாடுவது இந்திய அணிக்கு பலமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான அவர்கள் வந்ததுமே டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்வியிலிருந்து இந்தியா மீண்டெழுந்துள்ளது.
அதற்கு முதல் போட்டியிலேயே அவர்கள் பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்கள். அதே போல ஃபீல்டிங் செய்யும் போது இளம் இந்திய வீரர்களுக்கு அவர்கள் தங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்து உதவினார்கள். குறிப்பாக பல்வேறு தருணங்களில் ராணா, அர்ஷ்தீப் போன்ற இளம் பவுலர்களுக்கு தேவையான ஃபீல்டை விராட், ரோஹித் அமைத்துக் கொடுத்தார்கள்.
இந்நிலையில் கேப்டனாக இல்லாத விராட் கோலி, ரோஹித் சர்மா பாராட்டுக்கள் கிடைக்கும் என்ற நோக்கத்துடன் இளம் பவுலர்களுக்கு உதவி செய்வதில்லை என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மாறாக இந்திய அணியின் வெற்றி மற்றும் வருங்காலத்துக்காகவே அவர்கள் உதவி செய்வதாக கைஃப் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ஹர்ஷித் ராணா நல்ல லென்த்தில் பந்துகளை வீசினார். ஷார்ட்டாக போட்ட அவர் தன்னுடைய லென்த்தை முன்னால் வைத்தார். புதிய பந்தை அவர் மிகவும் திடமாக பயன்படுத்திக் கொண்டார். விராட் கோலி, ரோஹித் சர்மாவும் அவருக்கு களத்தில் ஆலோசனைகளை வழங்கினார்கள். அதனாலேயே இளம் வீரர்கள் சீனியர் வீரர்களின் கீழ் நன்றாக விளையாடுவார்கள்”
இதையும் படிங்க: 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்.. என்ன காரணம்? – விவரம் இதோ
“இது எப்போதுமே இந்திய கிரிக்கெட்டில் ஒரு வழக்கமாக இருக்கிறது. ராஞ்சி போட்டியில் அர்ஷ்தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோரிடம் விராட் கோலி எத்தனை முறை சென்று பேசினார் என்பதை நாம் பார்த்தோம். ரோஹித் சர்மாவும் அவர்களுக்கு உள்ளீடுகளை வழங்கினார். அந்த வகையில் நாம் கேப்டன்களாக இல்லாவிட்டாலும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதையே விராட், ரோஹித் விரும்புகின்றார்கள். அவர்கள் பாராட்டுகளைப் பற்றி கவலைப்படாமல் பவுலர்களுக்கு ஆலோசனைகளைத் தருகின்றனர். அதற்கு வெற்றி முடிவுகளே சாட்சியாகும்” என்று கூறினார்.