- Advertisement -
ஐ.பி.எல்

உங்களோட 2 கேள்விக்கும் பதில் கொடுத்துட்டாரு.. இனிமேல் விராட் கோலி பற்றி பேசாதீங்க.. எச்சரித்த கைஃப்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக மே 9ஆம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற்ற 58வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 60 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் அந்த அணி தக்க வைத்துக் கொண்டது ஆர்சிபி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 92, கேமரூன் கிரீன் 46, ரஜத் படிடார் 55 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த பஞ்சாப் அதிரடியாக விளையாட முயற்சித்து 17 ஓவரில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ரிலீ ரோசவ் 61 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

கைப் கருத்து:
இந்த வெற்றிக்கு 92 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார். முன்னதாக இந்த வருடம் சொந்த சாதனைகளுக்காக குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய விராட் கோலி பெங்களூரு அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக விமர்சனங்கள் காணப்பட்டன. ஆனால் உண்மையாக இதுவரை அந்த அணி பதிவு செய்த 5 வெற்றிகளில் விராட் கோலி தான் 2 ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

குறிப்பாக இப்போட்டியில் தன்னுடைய சதத்தை பற்றி கவலைப்படாமல் விளையாடிய அவர் 7 பவுண்டரி 6 சிக்சருடன் 92 (47) ரன்களை 195.74 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். இந்நிலையில் சுயநலமாக குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார் என்று சொன்னவர்களின் 2 விமர்சனத்திற்கும் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே இனிமேல் ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி பேசுவதை அனைவரும் நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கும் அவர் விராட் கோலி எப்போதுமே அணிக்கான வீரர் என்று பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “47 பந்துகளில் 92 ரன்கள் அடித்த விராட் கோலி 18வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானார். இந்த அணி வீரரை பற்றிய ஸ்ட்ரைக் ரேட் மற்றும் இன்டென்ட் விவாதங்கள் இத்துடன் நிற்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: செங்கோட்டையில் கொடியா எத்துறீங்க.. எங்களுக்கும் கொஞ்சம் அது இருக்கு சார்.. லக்னோ உரிமையாளரை விளாசிய ஷமி

இதுவரை 634 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பையை தன் வசம் வைத்துள்ள விராட் கோலி 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். இதை தொடர்ந்து பெங்களூரு ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல கடைசி 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது. அதில் வென்று அதிர்ஷ்டத்துடன் அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதை பார்க்க ஆர்சிபி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -