
சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியா கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் திணறுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் இந்த தோல்விக்கு வீரர்களின் தேர்வு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக அடுத்த நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் நல்ல ஃபார்மில் இருக்கும் தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்படாததை சொல்லலாம்.
முன்னதாக வருடக் கணக்கில் ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து பெரிய ரன்கள் அடித்தால் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். அதே போல விஜய் ஹசாரே கோப்பையில் அசத்தும் வீரர்களுக்கே இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைத்து வந்தது. ஆனால் ஐபிஎல் வந்தது முதல் அந்த நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது என்று சொல்லலாம்.
கம்பீர் கருத்து:
ஏனெனில் இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் ஒரு வருடம் அசத்தினால் போதும் உடனடியாக அவர்களுக்கு இந்திய அணியில் சிவப்பு கம்பளம் விரித்து வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. மறுபுறம் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் கடினமாக உழைக்கும் வீரர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. இந்நிலையில் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு ஐபிஎல் தொடரை குறுக்கு வழியாக பயன்படுத்தக் கூடாது என்று கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.
மேலும் ரஞ்சிக் கோப்பையில் அசத்தும் வீரர்கள் டெஸ்ட் அணியிலும் விஜய் ஹசாரே கோப்பையில் அசத்துபவர்கள் ஒருநாள் அணியிலும் தேர்வு செய்யப்பட வேண்டுமென்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கருக்கு அவர் மறைமுகமான பாடமே எடுத்துள்ளார். இது பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் எத்தனை இளம் வீரர்கள் விளையாட விரும்புகிறார்கள் என்பதில் மிகப்பெரிய கவலை ஏற்படுகிறது”
“ஐபிஎல் இந்தியாவுக்காக விளையாடுவதற்கான குறுக்கு வழியாக இருக்கக் கூடாது என்று நான் நம்புகிறேன். முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுபவர்கள் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும். விஜய் ஹசாரே கோப்பையில் அசத்துபவர்கள் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும். அதே சமயம் ஐபிஎல் தொடரில் அசத்தும் வீரர்களை நீங்கள் டி20 அணிக்கு தேர்வு செய்யலாம்”
இதையும் படிங்க: 2 மாசத்துல போறவன் கிடையாது.. சிஎஸ்கே ஒரு எமோஷனல்.. அதை கேட்டு வாங்கக்கூடாது.. தல தோனி பேட்டி
“இன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டை பார்க்கும் போது 2 – 3 அணிகளை தவிர்த்து இந்தியாவுக்கு போட்டியை கொடுக்கும் நிறைய அணிகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்திய அணியின் தரத்திற்கு நிகராக இங்கே பல அணிகள் இல்லை. எனவே இன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டை ஐபிஎல் மிகவும் போட்டி மிகுந்த தொடராக வந்து விட்டதாக நான் கருதுகிறேன். உள்ளூர் வீரர்களின் தரமும் மாறியுள்ளது. அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகின்றனர்” என்று கூறினார்.