ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் அந்தப்போட்டி ஜூன் ஒன்பதாம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. அதில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிகமாக வாய்ப்புள்ளதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.
ஏனெனில் ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றில் பெரும்பாலும் பாகிஸ்தானை தோற்கடித்துள்ள இந்தியா நிறைய வெற்றிகளை பெற்றுள்ளது. அத்துடன் சமீப காலங்களில் கத்துக்குட்டி அணிகளிடமே திணறும் பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக அமெரிக்காவிடம் தோற்றது. அதனால் தற்போது எக்ஸ்ட்ரா அழுத்தத்தையும் விமர்சனத்தையும் சந்தித்துள்ள பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
பலவீனத்தை பயன்படுத்தி:
குறிப்பாக இந்தியாவின் நம்பிக்கை நாயகர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பாகிஸ்தானுக்கு சவாலை கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தானின் முகமது அமீர் தெரிவித்துள்ளார். குறிப்பாக 15 – 20 பந்துகளை தாண்டி விட்டால் அவரை நிறுத்துவது கடினம் என்று ஆமீர் தெரிவித்துள்ளார்.
எனவே அதற்கு முன்பாகவே கால்கள் பகுதியில் வீசி அவருடைய விக்கெட்டை எடுக்க உள்ளதாகவும் அமீர் கூறியுள்ளார். ஏனெனில் அந்த லைனில் ரோகித் சர்மா பலவீனத்தைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதை நீங்கள் அறிவீர்கள். தன்னுடைய நேரம் வரும் போது அவர் யாரையும் விட மாட்டார்”
“இருப்பினும் ஒரு பவுலராக ஆரம்பத்திலேயே உங்களுக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக அவருடைய கால்களில் நீங்கள் அடிக்க வேண்டும் அல்லது தொடர்ந்து அங்கேயே வீச வேண்டும். ஆனால் 15 – 20 பந்துகளை எதிர்கொண்டு விட்டால் அவரை கட்டுப்படுத்துவது கடினம். எனவே புதிய பந்தில் கால்களில் அடித்து ரோகித் சர்மாவை அவுட்டாக்குவதே என்னுடைய இலக்காகும். அதில் நான் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டுள்ளேன்”
இதையும் படிங்க: என்னை நீக்கிய பி.சி.சி.ஐ-க்கு பதிலடி கொடுக்க தான் இந்த 2 கோப்பையையும் ஜெயிச்சேன் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி
“2019 உலகக் கோப்பையில் எங்களுக்கு எதிராக 140 ரன்கள் அடித்தது ரோஹித் சர்மாவின் ஒரு சிறந்த ஆட்டமாகும். அப்போட்டியில் ஆரம்பத்தில் பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. அதில் கேஎல் ராகுல் தடுமாறினாலும் ரோகித் சர்மா போட்டியை மாற்றி விட்டார். அந்த வகையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் எப்போதும் எளிதாக இருக்காது. அது வருங்காலத்திலும் பொழுதுபோக்காகவும் அழுத்தம் நிறைந்ததாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.