ENG vs SA : மொய்ன் அலி மிரட்டல் சாதனை, பதிலுக்கு தெறிக்கவிட்ட தெ.ஆ இளம் வீரர் – விவரம் இதோ

Moeen Ali Tristan Stubbs ENG vs RSA
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மழையால் 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதை தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜூலை 27-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு பிரிஸ்டோல் துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு வெறும் 7 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்கள் தெறிக்கவிட்ட கேப்டன் ஜோஸ் பட்லர் 22 (7) ரன்களிலும் மறுபுறம் தடுமாறிய ஜேசன் ராய் 8 (15) ரன்களிலும் அவுட்டானார்கள்.

அந்த நிலைமையில் களமிறங்கிய டேவிட் மாலன் – ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு விரைவாக ரன்களை சேர்த்தனர். இதில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் டேவிட் மாலன் 43 (23) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மொய்ன் அலி தனது பங்கிற்கு ஜானி பேர்ஸ்டோவுடன் 4-வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் மிரட்டலான பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து வலுப்படுத்தினார்.

- Advertisement -

மிரட்டிய மொய்ன்:
குறிப்பாக ஆண்டிலோ பெலுக்வியோ வீசிய 17-வது ஓவரில் மட்டும் இந்த ஜோடி 33 ரன்களை பறக்கவிட்ட நிலையில் 2 பவுண்டரி 6 சிக்சருடன் 52 (18) ரன்களில் மொய்ன் அலி ஆட்டமிழந்தார். அதைவிட 16 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற லியம் லிவிங்ஸ்டன் (17 பந்துகள்) சாதனையையும் முறியடித்தார். அவருடன் அட்டகாசமாக பேட்டிங் செய்த ஜானி பேர்ஸ்டோ 3 பவுண்டரி 8 மெகா சிக்ஸர்களுடன் 90 (53) ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்த முரட்டுத்தனமான பேட்டிங் காரணமாக 20 ஓவர்களில் 234/6 ரன்களைக் குவித்த இங்கிலாந்து டி20 கிரிக்கெட்டில் தங்களது 2-வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. தென்ஆப்பிரிக்கா சார்பில் பந்துவீச்சில் லுங்கி நிகிடி 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 235 என்ற கடினமான இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு குயின்டன் டி காக் 2 (4) ரிலீ ரோசாவ் 4 (4) என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 7/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்றது.

- Advertisement -

மிரட்டிய ஸ்டப்ஸ்:
இருப்பினும் 3-வது விக்கெட்டுக்கு 65 பார்ட்னர்ஷிப் ரன்கள் சேர்த்த ரீசா ஹென்றிக்ஸ் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 52 (33) ரன்களும் ஹென்றிச் க்ளாஸென் 20 (14) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லரும் 8 (12) ரன்களில் அவுட்டானார். அதனால் கதை முடிந்தது என்று நினைத்த வேளையில் மிடில் ஆர்டரில் தனது முதல் இன்னிங்ஸ்சில் களமிறங்கிய இளம் வீரர் ட்ரிட்ஷன் ஸ்டப்ஸ் யாருமே எதிர்பாராத வகையில் வெறி கொண்ட வேங்கையாக 2 பவுண்டரி 8 மெகா சிக்ஸர்களை பறக்க விட்டு வெற்றிக்காக தனி ஒருவனாக போராடி 72 (28) ரன்களை 257.14 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்டு ஆட்டமிழந்தார்.

இருப்பினும் அவருக்கு இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 193/8 ரன்கள் மட்டுமே எடுத்தது தென்னாப்பிரிக்கா போராடி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த அசத்தல் வெற்றியால் இங்கிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 16 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து முக்கிய பங்காற்றிய மொயீன் அலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

ரசிகர்கள் அச்சம்:
இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்றாலும் அதன் வெற்றிக்காக தனி ஒருவனாக போராடிய ட்ரிஷன் ஸ்டப்ஸ் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் மனதை வென்று பாராட்டுகளை அள்ளி வருகிறார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் அரைசதம் அடித்த தென்னாப்பிரக்க வீரர் (1 வருடம் 347 நாட்கள்) என்ற சாதனையும் படைத்தார். உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய இவர் ஐபிஎல் 2022 தொடரில் டைமல் மிஸ்ஸ் காயமடைந்ததால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட தேர்வானார். அந்த அதிர்ஷ்டம் இந்தியாவுக்கு எதிராக கடந்த ஜுலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு விளையாடும் வாய்ப்பையும் கொடுத்தது.

அதில் டெல்லியில் நடந்த போட்டியில் அறிமுகமான அவர் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறாத நிலையில் இப்போட்டியில் முதல் முறையாக களமிறங்கி வெளுத்து வாங்கினார். இதனால் ஆச்சரியமடைந்த டேல் ஸ்டெய்ன், மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் அடுத்த 10 வருடங்களுக்கு இவரும் குட்டி ஏபிடி என அழைக்கப்படும் மற்றொரு தென்னாப்பிரிக்க இளம் வீரர் தேவாலட் ப்ரேவிஸ் ஆகியோர் ரசிகர்களை மகிழ்விக்க போவதாக பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: IND vs WI : அதுக்கு பேசாமல் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் – மாறிமாறி சொதப்பிய 2 இளம் வீரர்களை கலாய்க்கும் ரசிகர்கள்

ஆச்சரியப்படும் வகையில் அந்த 2 வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் டிம் டேவிட்டும் அதே அணியில் இடம் பிடித்துள்ளார். எனவே ஐபிஎல் 2022 தொடரில் கடைசி இடம் பிடித்த மும்பை வருங்காலங்களில் இந்த 3 இளம் முரட்டுத்தனமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் வருங்காலங்களில் எதிரணிகளை வெளுத்து வாங்க போவதாக இப்போதே நிறைய எதிரணி ரசிகர்கள் அச்சத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement