சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் எழுச்சிக்கும் இந்தியாவின் சரிவுக்கும் அது தான் காரணம் – ஓப்பனாக பேசிய மொயின் அலி

Moeen Ali
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன் ட்ராபியை எம்எஸ் தோனி தலைமையில் வென்று சாதனை படைத்தது. அதன் பின் கடந்த 10 வருடங்களாக எத்தனையோ தரமான வீரர்கள் விளையாடிய போதிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அனுபவம் மிக்கவர்கள் கேப்டனாக செயல்பட்ட போதிலும் இந்தியா அடுத்த ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருவது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக லீக் சுற்றில் அசத்தும் இந்தியா நாக் அவுட் சுற்றில் ஏதோ ஒரு முக்கிய தருணத்தில் சொதப்பி வெறுங்கையுடன் வெளியேறுவது வாடிக்கையாகி விட்டது.

ENg vs IND

- Advertisement -

ஆனால் உலகக்கோப்பையை தவிர்த்து சாதாரண இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை அடித்து நொறுக்கும் இந்தியா தொடர் வெற்றிகளை பெறுவது இந்திய ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இருப்பினும் இந்த தோல்விக்கு ஐபிஎல் எனும் அரக்கன் தான் முக்கிய காரணம் என்று சமீப காலங்களில் நிறைய இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் இந்தியாவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் தரமான இளம் வீரர்களை கண்டறியும் நோக்கத்துடன் கடந்து 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் இன்று வழி தவறி வியாபார நோக்கத்தில் நடைபெறும் விளையாட்டு தொடராக மாறி விட்டது.

ஐபிஎல் தான் காரணம்:
ஏனெனில் நாட்டுக்காக வருடம் முழுவதும் விளையாடினாலும் 10 கோடி சம்பளமாக கிடைப்பதில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் வெறும் ஓரிரு மாதங்களில் விளையாடுவதற்காக 10 – 15 கோடிகள் கொடுக்கப்படுவதால் பெரும்பாலான வீரர்கள் அதற்குத்தான் இப்போதெல்லாம் முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் தவறாமல் விளையாடுவதும் நாட்டுக்காக பணிச்சுமை மற்றும் காயம் என்ற பெயரில் வெளியேறுவதும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ENg vs IND Jos Buttler Alex hales

அதை விட ஐபிஎல் தொடரில் விளையாடும் நிறைய வெளிநாட்டு வீரர்கள் இந்திய வீரர்களுடன் பழகி அவர்களது பலம் பலவீனங்களை தெரிந்து கொள்வதுடன் இந்திய கால சூழ்நிலைகளை தெரிந்து கொள்கிறார்கள். அதனால் இந்தியாவுக்கு எதிராகவும் இந்திய மண்ணிலும் நடைபெறும் போட்டிகளிலும் அதை பயன்படுத்தி அடித்து நொறுக்கும் வெளிநாட்டவர்கள் எளிதாக வெற்றிகளை தட்டிப் பறித்து செல்கிறார்கள். இந்நிலையில் 2017இல் இயன் மோர்கன் தலைமையில் அதிரடிப்படையாக மாறி சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே சமயத்தில் 50 ஓவர் (2019) மற்றும் 20 ஓவர் (2022) உலக கோப்பைகளை வென்ற ஒரே அணியாக வரலாற்று உலகச் சாதனையை இங்கிலாந்து படைப்பதற்கு ஐபிஎல் மிகப்பெரிய உதவி செய்துள்ளதாக அதன் நட்சத்திர வீரர் மொயின் அலி வெளிப்படையாக பேசியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் விளையாடுவது எங்களுக்கு நிறைய வகையில் உதவுகிறது. சொல்லப்போனால் ஐபிஎல் தொடர் இங்கிலாந்து அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. ஏனெனில் என்னை போன்ற பெரும்பாலான வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளோம். அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடும் போது இந்திய வீரர்களின் பலம் மற்றும் பலவீனங்களை உங்களால் அறிந்து கொள்ள முடிகிறது”

moeen ali

“அது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போது அதிகமாக உதவுகிறது. அத்துடன் எங்கள் நாட்டில் இல்லாததை விட இந்தியாவில் அதிக ரசிகர்களுக்கும் முன்னிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவது அழுத்தத்தை எப்படி சமாளித்து விளையாட வேண்டும் என்பதிலும் மிகப்பெரிய உதவி செய்கிறது” என்று கூறினார். முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அரையிறுதியில் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாத அளவுக்கு இந்தியாவை அடித்து நொறுக்கிய பின் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவமே இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவியதாக கேப்டன் ஜேஸ் பட்லர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: அவரே ஃபார்முக்கு வந்துட்டாரு, நேரம் நெருங்கிடுச்சு நீங்க எத்தனை நாள் இப்டியே உருட்டுவீங்க – ரோஹித்தை விமர்சித்த கம்பீர்

அதே போல் 2011 உலகக் கோப்பையை காலத்தை விட தற்போது ஐபிஎல் தொடரால் நிறைய அணிகள் இந்திய மண்ணில் நிலவும் கால சூழ்நிலைகளை தெரிந்து தெரிந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாட கற்றுக் கொண்டுள்ளதால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய நாடுகளாலும் 2023 உலக கோப்பையை வெல்ல முடியாது என்று இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா சமீபத்தில் தெரிவித்திருந்தார். மொத்தத்தில் ஐபிஎல் என்பது இந்தியாவுக்கு சாதகத்தை விட பாதகத்தையே அதிகம் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement