Ashes 2023 : பரம எதிரி ஆஸியை வீழ்த்த இங்கிலாந்தின் மாஸ் திட்டம், ஓய்வு முடிவை வாபஸ் பெற்று அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்

ENG vs RSA Ollie Robinson
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி துவங்கியது. உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் இந்த போட்டியில் கோப்பையை வென்று சமீப காலங்களில் இந்தியாவிடம் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க தயாராகியுள்ள ஆஸ்திரேலியா அடுத்ததாக பரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் தொடரில் களமிறங்க உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் மோதலை மிஞ்சும் வகையில் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே நடைபெற்று வரும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடரை வெல்ல இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

குறிப்பாக 2015க்குப்பின் 7 வருடங்களாக ஆஷஸ் தொடரை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் இங்கிலாந்து கடைசியாக நடைபெற்ற தொடரில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது. மேலும் 2019இல் கடைசியாக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரையும் பென் ஸ்டோக்ஸ் உதவியுடன் சமன் மட்டுமே செய்ய முடிந்த அந்த அணி இம்முறை எப்படியாவது தங்களது கௌரவமாக கருதப்படும் ஆஷஸ் கோப்பையை முத்தமிட முழுமூச்சுடன் களமிறங்க உள்ளது. குறிப்பாக ஜோ ரூட் தலைமையில் மிகப்பெரிய சரிவை சந்தித்த இங்கிலாந்து கடந்த வருடம் புதிதாக பொறுப்பேற்ற கேப்டன் பென் ஸ்டோக்ஸ் – பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் கொதித்தெழுந்து அதிரடியான வெற்றிகளை பெற்று வருகிறது.

- Advertisement -

ஓய்வு முடிவு வாபஸ்:
அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஸ்டைலை பின்பற்றும் இங்கிலாந்து அவர்களது தலைமையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளை அடித்து நொறுக்கி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதனால் இம்முறை ஆஸ்திரேலியாவை ஒரு கை பார்ப்பதற்கு தயாராகியுள்ள இங்கிலாந்து தங்களது அணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மொயின் அலியை இத்தொடரில் தேர்வு செய்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மொய்ன் அலி 64 போட்டிகளில் 2914 ரன்களையும் 195 விக்கெட்களையும் எடுத்த நிலையில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடுவதற்காக கடந்த 2021இல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் ரவீந்திர ஜடேஜாவை போல தாக்கத்தை ஏற்படுத்தும் பேட்டிங் செய்யக்கூடிய மொய்ன் அலி தங்களுடைய அதிரடிப்படையில் இருந்தால் இன்னும் வெற்றிகரமாக செயல்படலாம் என்று கருதிய ஸ்டோக்ஸ் – மெக்கல்லம் ஆகியோர் கடந்த ஒரு வருடமாகவே “டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுங்கள். உங்களுக்கான ஆதரவை கொடுத்த தயாராக உள்ளோம்” என்று பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியானது.

- Advertisement -

தற்போது அதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள இங்கிலாந்து வாரிய இயக்குனர் ராப் கீ ஆஷஸ் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள தங்களது அணியில் காயமடைந்து வெளியேறிய ஸ்பின்னர் ஜாக் லீச்சுக்கு பதிலாக மொய்ன் அலி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவது பற்றி மொய்ன் அலியிடம் கடந்த வாரம் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். அதற்கு சில நாட்கள் எடுத்துக் கொண்ட அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ளதாக ஆர்வத்தை தெரிவித்தார்”

“எனவே நல்ல அனுபவத்தையும் ஆல் ரவுண்டராக அசத்தும் திறமையும் கொண்டுள்ள அவர் எங்களுடைய ஆஷஸ் கோப்பையை வெல்லும் பயணத்தில் உதவிகரமாக இருப்பார். அவருக்கும் எஞ்சிய இங்கிலாந்து அணிக்கும் நாங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்” என்று கூறினார். அந்த வகையில் ஆஸ்திரேலியாவை திறம்பட எதிர்கொள்வதற்காக இங்கிலாந்து எடுத்துள்ள இந்த புதிய திட்டம் அந்நாட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: WTC Final : அவர் பிளேயிங் லெவன்ல விளையாட மாட்டார்னு நான் சொல்லவே இல்லையே – ரோஹித் சர்மா பேட்டி

ஆஷஸ் 2023 தொடருக்கான இங்கிலாந்து அணி இதோ : பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டுவர்ட் பிராட், ஹரி ப்ரூக், ஜாக் கிராவ்லி, பென் டூக்கெட், டான் லாரன்ஸ், ஓலி போப், மேத்தியூ போட்ஸ், ஓலி ராபின்சன், மொய்ன் அலி, ஜோ ரூட், ஜோஸ் டாங், கிறிஸ் ஓக்ஸ், மார்க் வுட்.

Advertisement