மகளிர் ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் மார்ச் 6ஆம் தேதி லக்னோவில் 16வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் யூபி வாரியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய யூபி அணி 20 ஓவரில் 150/9 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஜார்ஜியா வோல் 55, கிரேஸ் ஹரிஷ் 28, கேப்டன் தீப்தி சர்மா 27 ரன்கள் எடுத்தனர். மும்பை அணிக்கு அதிகபட்சமாக எமிலியா கெர் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக விளையாடிய மும்பை அணிக்கு எமிலியா கெர் 10, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
மும்பை வெற்றி:
இருப்பினும் மற்றொரு துவக்க வீராங்கனை ஹெய்லே மேத்தியூஸ் அதிரடியாக விளையாடி 68 (46) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய நட் ஸ்கீவர் 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் அமஞ்சோத் கௌர் 12*, யஸ்டிக்கா பாட்டியா 10* ரன்கள் எடுத்ததால் 18.3 ஓவரில் 153/4 ரன்களை எடுத்த மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிரேஸ் ஹரிஷ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் யூபி தோல்வியை சந்தித்தது. முன்னதாக இந்தப் போட்டியில் யூபி அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது 19 ஓவர்களின் முடிவில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவரை வீசி முடிக்கவில்லை. அதனால் விதிமுறைப்படி உள் வட்டத்திற்கு வெளியே ஒரு ஃபீல்டரை குறைக்குமாறு மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌருக்கு நடுவர் கட்டளையிட்டார்.
மும்பை கேப்டனுக்கு அபராதம்:
ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத அவர் ஏதோ சில தன்னுடைய கருத்துக்களை நடுவரிடம் அதிருப்தியாக தெரிவித்தார். அதைப் பார்த்த யூபி வீராங்கனை சோபி எக்லஸ்டன் நடுவரிடம் சென்று தம்மிடம் இருந்த ஏதோ ஒரு கருத்தை தெரிவித்தார். அதனால் கோபமடைந்த ஹர்மன்ப்ரீத் நான் நடுவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் நீங்கள் ஏன் வருகிறீர்கள்? என்ற வகையில் அவரிடம் கோபமாக பேசினார்.
இதையும் படிங்க: சச்சின் மற்றும் ஜாஹீர் கான் ஆகியோரது சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ
அப்போது இருவருடைய வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து போட்டி நடைபெற்று முடிந்தது. இறுதியாக அந்த நேரத்தில் நடுவர் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் அதிருப்தி தெரிவித்து சோபி எக்லஸ்டனிடம் வம்பிழுத்த ஹர்மன்ப்ரீத் கௌருக்கு இந்தப் போட்டியிலிருந்து 10% சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.



