பிரியா மனதுடன் விடை பெற்றார் – இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சிங்கப்பெண் மிதாலி ராஜ் ! குவியும் வாழ்த்துக்கள்

Mithali Raj
- Advertisement -

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் தனது அபார திறமையால் கடந்த பல வருடங்களாக சிறந்த பேட்டிங் வீராங்கனையாகவும் கேப்டனாகவும் பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த மிதாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 1982இல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்த இவர் கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட துவங்கி தனது 17-வது வயதிலேயே கடந்த 1999இல் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அந்த முதல் போட்டியிலேயே அட்டகாசமான சதமடித்த அவர் இளம் சிங்கம் பெண்ணாக சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்தார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக சிறப்பாக பேட்டிங் செய்யத் துவங்கிய அவர் ஒருசில வருடங்களிலேயே இந்திய மகளிர் அணியின் முக்கிய நம்பிக்கை நட்சத்திர வீராங்கனையாக உருவெடுத்தார்.

அந்த சமயத்தில் விளையாடிய சீனியர் வீரர்களை காட்டிலும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் 2005இல் முதல் முறையாக கேப்டனாகவும் பொறுப்பேற்று அந்த வருடம் நடந்த உலகக் கோப்பையில் இந்தியாவை மிகச் சிறப்பாக வழிநடத்தி இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். இருப்பினும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்து இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டாலும் அவருக்கு நிகரான ஒரு வீராங்கனை இந்திய அணியில் இல்லாத காரணத்தால் நிரந்தர கேப்டனாக பல வருடங்கள் இந்தியாவை வழி நடத்தினார்.

- Advertisement -

ரன்கள், சாதனைகள்:
வருடங்கள் செல்ல செல்ல பேட்டிங்கில் பல மடங்கு ஜொலிக்க தொடங்கிய அவர் அதற்கு முன் அசத்திய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு வீராங்கனைகளையும் மிஞ்சி அவர்கள் படைத்த உலக சாதனைகளையும் உடைத்து பேட்டிங்கில் இமயத்தின் உச்சியை தொடத் துவங்கினார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை, தொடர்ச்சியாக அதிக சதங்கள் அடித்த வீராங்கனை, மகளிர் டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை எடுத்த முதல் வீராங்கனை உட்பட எண்ணற்ற சாதனைகளைப் படைத்த அவர் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மகளிர் கிரிக்கெட்டில் ஒரு மாணிக்கமாக உருவெடுத்தார்.

அதனால் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் நிறைய உலக சாதனைகளை படைத்த அவர் கேப்டனாக ஹர்மன்பிரீட் கவூர், ஸ்மிருதி மந்தனா போன்ற நிறைய தரமான இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பளித்து இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்திற்கும் நல்ல அடித்தளமிட்டார். ஒரு கேப்டனாகவும் வீராங்கனையாகவும் நாட்டுக்காக விளையாடிய அவர் பல இளம் வீராங்கனைகளுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.

- Advertisement -

மேலும் 2005 முதல் நடைபெற்ற அத்தனை மகளிர் உலகக் கோப்பைகளிலும் இந்தியாவை வழி நடத்திய அவர் தலைமையில் 2017இல் மீண்டும் இறுதிப் போட்டி வரை சென்ற இந்தியா இங்கிலாந்திடம் தோற்றது. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்தில் நடைபெற்ற 2022 ஐசிசி உலகக் கோப்பையில் அவர் தலைமையில் களமிறங்கிய இந்தியா நாக் சுற்றுக்கு கூட செல்ல முடியவில்லை.

பிரியா விடை:
இந்தியா போன்ற பெண்கள் உரிமை குறைந்த நாட்டில் 17 வயதில் அறிமுகமாகி 23 வருடங்கள் நாட்டுக்காக விளையாடிய மிதாலி ராஜ் இந்தியாவில் அதிகாரத்தின் கீழ் அடி பணிந்து கிடக்கும் நிறைய இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுப்பவராக கருதப்படுகிறார். சொல்லப்போனால் சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவான் சச்சினை போல் பேட்டிங் துறையில் உள்ள அத்தனை சாதனைகளையும் படைத்துள்ள அவர் 20 வருடங்களுக்கு மேல் விளையாடிய ஒரே வீராங்கனை என்ற உலக சாதனையையும் படைத்துள்ளார்.

- Advertisement -

கடந்த 2 தசாப்தங்களாக இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ராஜாங்கம் நடத்திய இவரை ஒரு பிரம்மாண்ட சகாப்தம் என்று அவரை அழைத்தால் மிகையாகாது. அப்படிப்பட்ட இவர் ஏற்கனவே டி20 போட்டிகளில் கடந்த 2019இல் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது 39 வயதைக் கடந்து விட்ட காரணத்தால் அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் வகையில் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறுவதாக இன்று தனது ட்வீட்டரில் அறிவித்துள்ளார்.

அது பற்றி பிரியாத மனதுடன் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “கடந்த பல வருடங்களாக உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. இது என்னுடைய வாழ்வின் 2-வது இன்னிங்சை தொடங்க வேண்டிய நேரமாகும். இந்திய கிரிக்கெட்டின் வெளிச்சமான வருங்காலத்திற்காக இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஓய்வு பெறுவது இதுவே கச்சிதமான தருணமாகும்” என்று தெரிவித்துள்ள அவர் இத்தனை நாட்களாக தமக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ நிர்வாகிகள் ரசிகர்கள் சக வீரர்கள் உட்பட அனைவருக்கும் மனதார நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஷேன் வார்னே கூறிய அந்த எனக்கு நம்பிக்கை ஊட்டின. அவரே எனது ரோல் மாடல் – குல்தீப் யாதவ் உருக்கம்

இந்தியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இன்றியமையாத வீராங்கனையாக வரலாற்றில் தனது பெயரை பொன்னெழுத்துக்களால் பொறித்துள்ள அவரின் ஓய்வை அடுத்து சச்சின் டெண்டுல்கர், விராட்கோலி, சவுரவ் கங்குலி உட்பட நிறைய முன்னாள் வீரர்களும் வல்லுனர்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement