ஐபிஎல் 2024 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2 மாதமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோடைகாலத்தில் மகிழ்வித்த இந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. குறிப்பாக சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா 3வது கோப்பையை வென்று 2வது வெற்றிகாரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்தது.
முன்னதாக இந்த தொடரில் வழக்கத்திற்கு மாறாக பவுலர்களை அடித்து நொறுக்கிய பேட்ஸ்மேன்கள் 1260 சிக்ஸர்கள் பறக்க விட்டனர். அதனால் 17 வருட ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட சீசனாக 2024 சீசன் புதிய சாதனையும் படைத்தது. அது போக ஹைதராபாத் அணி பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்களை விளாசி 9.2 ஓவரில் 166 ரன்களை சேசிங் செய்து சாதனை வெற்றிகளை பெற்றது.
ஸ்டார்க் நம்பிக்கை:
அந்த வகையில் ரசிகர்களுக்கு விருந்து மழை படைத்த ஐபிஎல் தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அந்தத் தொடரிலும் இதே போல பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் உலகக் கோப்பையில் இம்பேக்ட் வீரர் விதிமுறை மற்றும் ஃபிளாட்டான பிட்ச்கள் இருக்காது என்று ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற மிட்சேல் ஸ்டார்க் கூறியுள்ளார்.
எனவே 2024 டி20 உலகக் கோப்பையில் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஃபைனல் முடிந்ததும் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்குள்ள இம்பேக்ட் வீரர் விதிமுறை உலகக் கோப்பையில் இல்லை. அங்கே நீங்கள் அதிக ஆல் ரவுண்டர்களை சார்ந்திருப்பீர்கள்”
“அங்கே 8வது இடத்தில் உங்களால் பேட்டிங் ஆல் ரவுண்டரை இறக்க முடியாது. எனவே ஐபிஎல் தொடரில் அடிக்கப்படுவது போல டி20 உலகக் கோப்பையில் பெரிய ஸ்கோர்கள் அடிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அங்கே ஒரு பேட்ஸ்மேன் குறைவாக இருப்பார். பேட்ஸ்மேன்கள் பவர் பிளே ஓவர்களில் தைரியமாக இருக்க வேண்டும். ஐபிஎல் போல பந்தை பேட்ஸ்மேன்கள் இப்போதெல்லாம் சிறப்பாக அடிக்கின்றனர்”
இதையும் படிங்க: என்ன பிரயோஜனம்.. இதை வெச்சு கோப்பை ஜெயிக்க முடியாதே.. ஆர்சிபி அணியை புதிதாக விமர்சித்த ராயுடு
“குறிப்பாக இங்கே பிட்ச்கள் நன்றாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸில் இது போன்ற மைதானங்கள் இருக்காது. அது கொஞ்சம் சோர்வாக சுழலுக்கு சாதகமாக இருக்கும். குறிப்பாக தொடரின் இரண்டாவது பகுதியில் அது ஸ்லோவாக லோவாக சுழலுக்கு சாதகமாக இருக்கும். எனவே ஐபிஎல் தொடரில் விளையாடியதை விட உலகக் கோப்பையில் பவுலர்கள் அதிகமாக அசத்துவார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.



