ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. அடுத்ததாக இரண்டாவது போட்டி டிசம்பர் 4ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் உள்ள புகழ்பெற்ற காபா மைதானத்தில் துவங்கியது. இளஞ்சிவப்பு பந்தில் பகலிரவு போட்டியாக நடைபெறும் அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு முதல் ஓவரிலேயே பென் டக்கெட்டை கோல்டன் டக் அவுட்டாக்கிய நம்பிக்கை நாயகன் மிட்சேல் ஸ்டார்க் அடுத்து வந்த ஓலி போப்பையும் டக் அவுட்டாக்கினார். அதனால் 5/2 என தடுமாறிய இங்கிலாந்துக்கு மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராவ்லி நிதானமாக விளையாடினார். அடுத்து வந்த ஜோ ரூட்டுடன் இணைந்த அவர் 3வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 76 ரன்களை குவித்து அவுட்டானார்.
ஜோ ரூட் அசத்தல்:
மறுபுறம் அசத்திய ஜோ ரூட்டும் அரை சதம் அடித்தார். எதிர்ப்புறம் வந்த ஹாரி ப்ரூக் 31, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். ஆனால் இந்தப் பக்கம் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய ஜோ ரூட் தன்னுடைய 40வது சதத்தை அடித்து அசத்தினார். அத்துடன் ஆஸ்திரேலியாவில் தனது 13 வருட கேரியரில் முதல் முறையாக சதத்தை அடித்த அவர் தன் மீதான விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் எதிர்ப்புறம் ஜேமி ஸ்மித் 19, கஸ் அட்கின்ஷன் 4, பிரைடன் கார்ஸ் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். ஆனால் ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடி காட்டியதால் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 325/9 ரன்களை குவித்து நல்ல துவக்கத்தைப் பெற்றுள்ளது. களத்தில் ரூட் 135*, ஆர்ச்சர் 32* ரன்களுடன் உள்ளனர்.
ஸ்டார்க் உலக சாதனை:
ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அந்த 6 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மிட்சேல் ஸ்டார்க் 102 போட்டிகளில் 415* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற வாசிம் அக்ரம் உலக சாதனையை உடைத்த ஸ்டார்க் புதிய சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: 13 வருட தவம்.. ஹைடன் மானத்தைக் காப்பாற்றிய ஜோ ரூட்.. ஆஸி மண்ணில் 88 வருடம் கழித்து சாதனை
இதற்கு முன் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் 104 போட்டிகளில் 414 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை. அவருடைய வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள ஸ்டார்க் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் 6வது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரைத் தவிர்த்து உலகில் வேறு எந்த பவுலரும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் 3 முறை கூட 5 விக்கெட்டுகளை எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



