தோனியிடம் கத்துக்கிட்டதே போதும், இந்திய தொடரில் காத்திருக்கும் சவால் பற்றி – நியூசி கேப்டன் மிட்சேல் சான்ட்னர் அதிரடி பேட்டி

Mitchell Santner
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறியது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஏற்கனவே நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியா ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது. முன்னதாக 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் 1 – 0 (3) என்ற கணக்கில் சாய்த்து டி20 தொடரை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்தியா இம்முறை தங்களது சொந்த மண்ணில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs NZ

- Advertisement -

மறுபுறம் ஒருநாள் தொடரை இழந்து நம்பர் ஒன் இடத்தையும் கோட்டை விட்ட நியூசிலாந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இத்தொடரில் வெற்றிக்கு போராட உள்ளது. அந்த அணியில் வில்லியம்சன் உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் இல்லையென்றாலும் கிளன் பிலிப்ஸ், டேவோன் கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல் போன்ற தரமான வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்தியாவுக்கு மீண்டும் சவாலை கொடுக்க களமிறங்கும் அந்த அணியை சுழல் பந்து வீச்சாளர் மிட்சேல் சான்ட்னர் தலைமை தாங்குகிறார்.

தோனியிடம் பயிற்சி:
இது வரை 80 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட அவர் கேப்டனாக பெரிய அளவில் அனுபவமில்லாதவர் என்றே சொல்லலாம். இருப்பினும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோரின் தலைமையில் விளையாடிய போது கேப்டன்ஷிப் பண்புகளை கற்றுக்கொண்ட அனுபவம் தம்மிடம் இருப்பதாக தெரிவிக்கும் மிட்சேல் சான்ட்னர் நிச்சயமாக இத்தொடரில் இந்தியாவை சாய்த்து கோப்பை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் போட்டிக்கு முன்பாக அவர் பேசியது பின்வருமாறு.

Santner

“தோனி, பிளெமிங் ஆகிய இருவரையும் நீங்கள் பார்க்கும் போது எப்போதுமே அவர்கள் மிகவும் அமைதியாக பதற்றமடையாதவர்களாக இருப்பார்கள். அதே போல தான் நானும் இருப்பதாக உணர்கிறேன். கடந்த சில வருடங்களாகவே தோனியின் கீழ் விளையாடிய போது அமைதியுடன் பொறுப்புடன் எப்படி செயல்பட வேண்டும் என்று அனுபவத்தை எனக்கு கொடுத்துள்ளது. அத்துடன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறும் இப்போட்டியில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரை போலவே பிளெமிங் எப்போதும் அமைதியாக அணியை வழி நடத்துவார். அதே போலவே நாங்களும் இந்த தொடரில் எங்களது அணியை வழி நடத்த முயற்சிக்கவுள்ளோம்”

- Advertisement -

“ஒருநாள் தொடரில் நிறைய போட்டிகள் அதிக ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகளாக இருந்தது. எனவே டி20 தொடரிலும் அதில் பெரிய மாற்றம் இருக்கப் போவதில்லை. எனவே அந்த தொடரில் கிடைத்த அனுபவங்களை டி20 தொடரிலும் நாம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் டி20 தொடரிலும் அதிக ரன்களும் அதிரடியான ஆட்டமும் இருக்கும். மேலும் ஒருநாள் தொடரில் நாங்கள் 3 – 0 (3) என்ற கணக்கில் தோற்றோம் என்றாலும் அதில் சில போட்டிகளில் நாங்களும் சிறப்பாக செயல்பட்டோம். எனவே அந்த நேர்மறையான அனுபவங்களையும் செயல்பாடுகளையும் வைத்து இந்த டி20 தொடரை எதிர்நோக்கி உள்ளோம்”

santner

“நான் எப்போதுமே அமைதியாக இருப்பதே என்னுடைய இயற்கை குணமாகும். இருப்பினும் கேப்டனாக நீங்கள் செயல்படும் போது சில தருணங்களில் பதற்றமடைய வேண்டிய நேரங்கள் வரலாம். எனவே இந்தியாவில் மற்றுமொரு தொடரில் நான் கேப்டனாக செயல்படுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். இதை விட வேறு எனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்காது. எனவே இந்த வாய்ப்புக்காக காத்திருக்கும் நான் இத்தொடரில் மிகப்பெரிய சவாலையும் எதிர்கொள்வேன் என்பதில் சந்தேகமில்லை” என கூறினார்.

இதையும் படிங்க: நம்பர் ஒன் இடத்துக்காக சந்தோசப்படாதீங்க, நம்மிடம் இன்னும் அந்த வீக்னெஸ் இருக்கு – 2023 உ.கோ’க்கு முன் எச்சரித்த இர்பான் பதான்

வரலாற்றில் நிறைய வீரர்கள் தோனியிடம் கற்றுக்கொண்டு வெற்றிகரமாக செயல்படும் நிலையில் தாமும் அந்த வரிசையில் செயல்படுவேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 27ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement