நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அங்கு 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி ஆக்லாந்து நகரில் நவம்பர் 5ஆம் தேதி இந்திய நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் போராடி 164/6 ரன்களை அடித்து அசத்தியது. அதிகபட்சமாக சாய் ஹோப் அரை சதமடித்து 53, ரோஸ்டன் சேஸ் 28, ரோவ்மன் போவல் 33 ரன்கள் அடுத்து அசத்தினார்கள். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக்கப் டுபி 2, ஜக்காரி போல்க்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.
சான்ட்னர் போராட்டம்:
அடுத்ததாக 165 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு ஓப்பனிங்கில் டிம் ராபின்சன் 27, டேவோன் கான்வே 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதே போல ரச்சின் ரவீந்திரா 21 ரன்கள் எடுத்த நிலையில் மிடில் ஆர்டரில் மார்க் சேப்மன் 7, டேரில் மிட்சேல் 13, மைக்கேல் பிரேஸ்வெல் 1, ஜிம்மி நீசம் 11 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர். அப்போது 8வது இடத்தில் களமிறங்கிய கேப்டன் மிட்சேல் சான்ட்னர் அதிரடியாக விளையாடினார்.
அவருக்கு கை கொடுக்க முயற்சித்த ஜக்காரி போல்க்ஸ் 1, கைல் ஜெமிசன் 2 ரன்களில் அவுட்டாகி சென்றார்கள். அதனால் 107/9 என சரிந்த நியூஸிலாந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்துக்கு கேப்டன் சான்ட்னர் இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற எண்ணத்துடன் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அடித்து நொறுக்கினார்.
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி:
எதிர்புறமிருந்த 1* (1) ரன் எடுத்த ஜேக்கப் டுபிக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்காத அவர் ஓவரின் கடைசிப் பந்துகளில் சிங்கிள் எடுத்து வெற்றிக்கு வெறித்தனமாக போராடினார். அந்த வகையில் 8 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்ட அவர் 55* (28) ரன்கள் அடித்தும் 20 ஓவரில் நியூஸிலாந்து 157/9 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. இருப்பினும் ஒரு சர்வதேச டி20 போட்டியில் 8 அல்லது அதற்கு கீழே களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் அடித்த கேப்டன் என்ற உலக சாதனையை சான்ட்னர் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: வெறும் 7 ரன்ஸ்.. வெற்றிக்கு போராடிய சான்ட்னர்.. நியூஸிலாந்தில் 17 வருடம் கழித்து வெ.இ சாதனை வெற்றி
இதற்கு முன் 2024ஆம் ஆண்டு அபுஜாவில் நடைபெற்ற போட்டியில் ஈஸ்வட்னி நாட்டுக்கு எதிராக சிரா லியோன் கேப்டன் லன்ஸனா லேமின் 52* ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மறுபுறம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 3, ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.



