ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக லக்னோ நகரில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 50 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது பங்கேற்று விளையாடியிருந்தது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து சொந்த மண்ணில் லக்னோ அணி இந்த முக்கிய லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டி ஆரம்பித்ததும் இடையிடையே மழை குறுக்கிட்டதால் போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
கே.எல் ராகுலின் சாதனையை சமன் செய்த மிட்சல் மார்ஷ் :
அப்படி 19 ஓவர்கள் விளையாடிய லக்னோ அணியானது 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய மிட்சல் மார்ஷ் அதிகபட்சமாக 56 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர் என 111 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தவிர்த்து நிக்கோலஸ் பூரான் 38 ரன்களையும், ரிஷப் பண்ட் 32 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது லக்னோ அணியின் சார்பாக துவக்க வீரராக விளையாடிய மிட்சல் மார்ஷ் அந்த அணியின் முன்னாள் கேப்டனான கே.எல் ராகுலின் சாதனை ஒன்றினை சமன் செய்து அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகத்திய சாதனை யாதெனில் : லக்னோ அணிக்காக அதிக சதங்களை அடித்த வீரராக முன்னாள் கேப்டன் கே.எல் ராகுல் இருந்து வந்தார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடியிருந்த கே.எல் ராகுல் அந்த தொடரில் இரண்டு சதங்களை விளாசியிருந்தார். இவ்வேளையில் ஆர்.சி.பி அணிக்கெதிராக நடைபெற்ற இந்த போட்டியில் மிட்சல் மார்ஷ் அடித்த சதத்தின் மூலம் அவரும் லக்னோ அணிக்காக இரண்டு ஐ.பி.எல் சதங்களை அடித்து கே.எல் ராகுலின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இதையும் படிங்க : முதல் வேகப்பந்து வீச்சாளராக ஐ.பி.எல் போட்டிகளில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய – புவனேஷ்வர் குமார்
கடந்த 2025-ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 117 ரன்களை குவித்த மிட்சல் மார்ஷ் இந்த ஆண்டு ஆர்.சி.பி அணிக்கு எதிராக 111 ரன்களை அடித்ததன் மூலம் லக்னோ அணிக்காக இரண்டு சதங்களை விளாசிய வீரராக கே.எல் ராகுலின் சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



