இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 50-ஆவது லீக் போட்டியானது லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
புவனேஷ்வர் குமார் நிகழ்த்திய வரலாற்று சாதனை :
அதனை தொடர்ந்து முதலில் லக்னோ அணி விளையாடுகையில் அவ்வப்போது மழை காரணமாக போட்டி இடைவிட்டு, இடைவிட்டு நடந்ததால் போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக மிட்சல் மார்ஸ் 111 ரன்களையும், நிக்கோலஸ் பூரான் 38 ரன்களையும் குவித்து அசத்தினர். அதனை தொடர்ந்து தற்போது 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியானது விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக விளையாடிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் 4 ஓவர்கள் பந்துவீசி 34 ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் இருந்தார். இருப்பினும் இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் முதல் வேகப்பந்து வீச்சாளராக ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
கடந்த 2011 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான புவனேஸ்வர் குமார் இந்த போட்டிக்கு முன்னதாக 199 போட்டிகளில் விளையாடியிருந்த வேளையில் இன்றைய போட்டியானது அவருக்கு 200 ஆவது ஐ.பி.எல் போட்டியாக அமைந்தது. இதன்மூலம் 200 ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்ற முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதோடு ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் போட்டிகளில் 200 போட்டிகளில் விளையாடிய 12-ஆவது வீரர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : இந்த சீசன்ல தோனி ஒரே ஒரு மேட்ச் விளையாட தான் வாய்ப்பு இருக்கு.. அது அவரோட பேர்வெல் – அஷ்வின் ஓபன்டாக்
ஏற்கனவே இந்த பட்டியலில் 11 இந்திய வீரர்கள் இருந்தாலும் இவர் ஒருவர் மட்டுமே வேகப்பந்து வீச்சாளராக 200 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு ஆர்.சி.பி அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த புவனேஷ்வர் குமார் இந்த ஆண்டும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 17 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.



