IND vs WI : இந்தியாவின் ஏபிடி – எப்பா என்னா பேட்டிங், ஓப்பனிங்லயும் சாதித்த சூர்யாவை பார்த்து வியக்கும் ரசிகர்கள், வீடியோ உள்ளே

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதிய 3-வது டி20 போட்டி ஆகஸ்ட் 2-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது. லக்கேஜ் வருகையால் இந்தப் போட்டியும் ஒன்றரை மணி நேரம் தாமதமாக துவங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் முடிந்த அளவுக்கு போராடி 164/5 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் பிரண்டன் கிங் 20 (20) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற மிடில் ஆர்டரில் கேப்டன் நிக்கோலஸ் பூரான் 22 (23) அவுட்டானார்.

இருப்பினும் 17 ஓவர்கள் வரை சிறப்பாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அரைசதம் அடித்து 73 (50) ரன்களில் அவுட்டானார். இறுதியில் ரோவ்மன் போவல் 23 (14) ரன்களும் சிம்ரோன் ஹெட்மையர் 20 (12) ரன்களும் அதிரடியாக எடுத்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு 11* (5) ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார்.

- Advertisement -

இந்தியா முன்னிலை:
அந்த நிலையில் அடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக பேட்டிங் செய்து இந்தியாவை வெற்றி பாதையில் அழைத்து வந்தார். 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய இந்த ஜோடியில் கடைசி வரை பொறுமையாகவே பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 24 (27) ரன்களில் அவுட்டாக மறுபுறம் 8 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்கவிட்ட சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து 76 (44) ரன்கள் குவித்து வெற்றியை உறுதிசெய்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஹர்திக் பாண்டியா 4 (6) ரன்களில் அவுட்டானாலும் ரிஷப் பண்ட் 33* ரன்களும் தீபக் ஹூடா 10* (7) ரன்களும் எடுத்ததால் 19 ஓவரில் 165/3 ரன்களை எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் முதல் 2 போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருந்த இத்தொடரில் 2 – 1* (5) என்ற கணக்கில் மீண்டும் இந்தியா முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

- Advertisement -

இந்த வெற்றிக்கு கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே காயத்தால் வெளியேறிய போதிலும் அவரது இடத்தில் பொறுப்புடனும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் கடந்த 2021இல் அறிமுகமான இவர் ஒரு வருட காலத்திற்குள் 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவருக்கு அடுத்தபடியாக புவனேஸ்வர் குமார் மட்டுமே 3 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார்.

ஓப்பனிங்கிலும் சாதனை:
பொதுவாகவே 3, 4 ஆகிய மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கி சக்கைப்போடு போடக் கூடியவராக இருக்கும் இவர் சமீபத்திய இங்கிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய நிலையில் தனி ஒருவனாக சதமடித்து 117 ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடினார். அதனால் நல்ல பார்மில் இருக்கும் அவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற நிலையில் முதல் 2 போட்டிகளில் தடுமாறினார். அதனால் அவரையும் கெடுத்து இந்தியாவையும் கெடுக்க வேண்டாம் என்று ஒருசில முன்னாள் வீரர்கள் அந்த முடிவை எடுத்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை விமர்சித்தனர்.

இருப்பினும் இப்போட்டியில் ஓப்பனிங் இடத்திலும் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ள அவர் தன்னை நம்பிய ரோகித் மற்றும் அணி நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை தூளாக்கினார். மேலும் இப்போட்டியில் 76 ரன்கள் குவித்த அவர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிகபட்ச டி20 ஸ்கோர் பதிவு செய்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார். அந்த பட்டியல்:
1. சுரேஷ் ரெய்னா : 101, 2010
2. ரோஹித் சர்மா : 79*, 2010
3. சூரியகுமார் யாதவ் : 76, 2022

இந்தியாவின் ஏபிடி:
அவை அனைத்தையும் விட இப்போட்டியில் அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்த ரசிகர்கள் இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று வியந்து போய் பாராட்டுகிறார்கள். ஏனெனில் பேக்லிப்ட் பந்தை அசால்ட்டாக கவர் திசையில் சிக்ஸராக பறக்க விட்ட அவர் உடலை வளைத்து பந்துக்கு கீழே அமர்ந்து கீப்பருக்கு மேலே அடித்த பவுண்டரியை பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். அதுபோக மைதானத்தின் நாலா புறங்களிலும் பவுண்டரிகளை விளாசிய அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரிறி பேட்ஸ்மேன் என்று தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement